முகப்பு விளையாட்டு செய்திகள்
மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் மோதவுள்ள இந்தியா!
By எழில் | Published On : 03rd March 2020 05:25 PM | Last Updated : 03rd March 2020 05:25 PM | அ+அ அ- |

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது இந்திய அணி.
இன்று நடைபெற்ற இரு லீக் சுற்று ஆட்டங்களும் மழையால் பாதிக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதேபோல தாய்லாந்து - பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. தாய்லாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்த பிறகு மழையால் ஆட்டம் தொடரவில்லை.
புள்ளிகள் பட்டியலில் குரூப் ஏ பிரிவில் இந்தியா 8 புள்ளிகளும் ஆஸ்திரேலியா 6 புள்ளிகளும் பெற்றன. குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா 7 புள்ளிகளும் இங்கிலாந்து 6 புள்ளிகளும் பெற்றன.
மார்ச் 5 அன்று அரையிறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றவுள்ளது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. அன்றைய தினமும் மழையால் அரையிறுதி ஆட்டங்கள் பாதிக்கப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.
மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா நான்கு தடவை வென்றுள்ளது. முதல் போட்டியை 2009-ல் வென்றது இங்கிலாந்து அணி. இந்திய அணி மூன்று தடவை அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
மகளிர் தினமான மார்ச் 8 அன்று டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது.