சர்ச்சைக் கருத்துகளால் பிசிசிஐ வர்ணனைக் குழுவில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்?

பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக் கருத்துகளால் பிசிசிஐ வர்ணனைக் குழுவில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்?

இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்மசாலாவில் கைவிடப்பட்ட இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடருக்கான வர்ணனைக் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம்பெறவில்லை. கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகள் மற்றும் முக்கியமான ஐசிசி போட்டிகளில் இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்குத் தொலைக்காட்சியில் வர்ணனை செய்துள்ளார் மஞ்ச்ரேக்கர். 1996-ல் ஓய்வு பெற்றது முதல் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் அவர் இடம்பெற்று வருகிறார். 

பிசிசிஐ வர்ணனைக் குழுவில் இருந்து மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்கும் அவர் தேர்வாகமாட்டார் என்று கூறப்படுகிறது. 

சமீபகாலமாக மஞ்ச்ரேக்கர் தொடர்பாக சில சர்ச்சைகள் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமரிசனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு பக்கச் சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமரிசனங்கள் அதிகமாக எழுந்தன. அதேசமயம் ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியிலும் தோனியைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக ரசிகர்கள் அவருடைய வர்ணனை மீது அதிருப்தி தெரிவித்தார்கள். இதனால் அவரை வர்ணனையாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கும்படி பலரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் உலகக் கோப்பைப் போட்டியின்போது, ஆல்ரவுண்டர் ஜடேஜாவைத் தரக்குறைவாக விமரிசனம் செய்ததால் ஜடேஜாவின் கோபத்துக்கு ஆளானார் மஞ்ச்ரேக்கர். 

2017 ஐபிஎல் போட்டியின் தொலைக்காட்சி வர்ணனையில் பொலார்டைப் பற்றிக் கடுமையாக விமரிசித்தார் மஞ்ச்ரேக்கர். அவர் கூறியதாவது: பொலார்ட்டைப் பற்றி எண்ணும்போது அவர் கடைசி ஆறு ஏழு ஓவர்களில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன். அதற்கு முன்பு வந்து ஆடக்கூடிய அளவுக்கு அவருக்கு மூளை கிடையாது என்றார். 

இதை ஏற்றுக்கொள்ளாத பொலார்ட் ட்விட்டரில் மஞ்ச்ரேக்கரை விமரிசனம் செய்தார். உங்கள் வாயிலிருந்து நல்லது ஏதாவது வருமா? ஏனெனில் வாய்க்கு வந்தபடி பேசுவதற்காக உங்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. மூளையில்லாதவர் என்று விமரிசனம் செய்தது என்னை எந்தளவு பாதித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? வார்த்தையை விட்டுவிட்டால் பிறகு அதை மீண்டும் அள்ளமுடியாது என்று மஞ்ச்ரேக்கருக்குப் பதிலடி கொடுத்தார். 

இதற்கு மஞ்ச்ரேக்கர் பதில் கூறியதாவது: கிரோன் பொலார்டிடம் இருந்து தள்ளியே நிற்கிறேன். என்னைச் சுற்றிப் பாதுகாவலர்கள் உள்ளார்கள். இந்தத் தொழிலில் நீண்ட நாளாக உள்ளேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்று பதில் அளித்தார். 

சமீபத்தில், சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவை மட்டம் தட்டிப் பேசியதால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் மஞ்ச்ரேக்கர். கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு ஆட்டம் பற்றிய ஒரு விவாதத்தில், கிரிக்கெட் விளையாடிய எங்களுக்கு பந்து பற்றிய சந்தேகம் இல்லை என்று சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடாத போக்ளேவைக் குத்திக்காட்டினார் மஞ்ச்ரேக்கர். பிறகு தன் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஒரு பேட்டியில், 2019-ம் வருடம் ஒரு வர்ணனையாளராக எனக்கு மிகவும் மோசமாக அமைந்தது. ஒரு கருத்தினால் நான் நிதானத்தை இழந்து, மோசமாகப் பேசினேன். இதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார்.

இந்நிலையில், பிசிசிஐ வர்ணனைக் குழுவில் இருந்து மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிசிசிஐயிடமிருந்தோ மஞ்ச்ரேக்கரிடமிருந்தோ இதுவரை வெளிவரவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com