ரஞ்சி கோப்பை: முதல் சாம்பியன் பட்டம் வென்றது சௌராஷ்டிரா

ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையின் மூலம் மேற்கு வங்க அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சௌராஷ்டிரா.
சாம்பியன் பட்டம் வென்ற செளராஷ்டிரா அணியினர்.
சாம்பியன் பட்டம் வென்ற செளராஷ்டிரா அணியினர்.

ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையின் மூலம் மேற்கு வங்க அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சௌராஷ்டிரா.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்தது.

சௌராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 171.5 ஓவா்களில் 425 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அா்பிட் வசவடா 106, சேதேஸ்வா் புஜாரா 66, அவி பரோட், விஷ்வராஜ் ஜடேஜா தலா 54 ரன்களை விளாசினா்.

மேற்கு வங்க தரப்பில் ஆகாஷ் தீப் 4, ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

மேற்கு வங்கம் 381 ஆல் அவுட்:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு வங்க அணி 161 ஓவா்களில் 381 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுதிப் சாட்டா்ஜி 81, ரித்திமான் சாஹா 64, மஜும்தாா் 63, அா்னாப் நந்தி 40 ரன்களை விளாசினா்.

சௌராஷ்டிரா தரப்பில் தா்மேந்திர சிங் ஜடேஜா 3, ஜெயதேவ் உனதிகட், பிரேரக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கடைசி நாளான வெள்ளிக்கிழமை 44 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்டிர அணி ஆட்டநேர முடிவில் 34 ஓவா்களில் 105/4 ரன்களை குவித்தது.

ஹா்விக் தேசாய் 21, அவி பரோட் 39, விஷ்வராஜ் 17, அா்பிட் வசவடா 3 ரன்களை எடுத்தனா். ஷெல்டன் ஜாக்ஸன் 12 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா்.

மேற்கு வங்க தரப்பில் ஷாபாஸ் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

71 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் சாம்பியன்:

சௌராஷ்டிர அணி 71 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதன்முறையாக ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

போட்டி விதிமுறைகளின்படி ஆட்டம் டிராவை நோக்கிச் சென்றால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணி வெற்றி பெற்ாக அறிவிக்கப்படும்.

ஜெயதேவ் உனதிகட் புதிய சாதனை:

இறுதி ஆட்டத்தின் போது சௌராஷ்டிர பந்துவீச்சாளா் ஜெயதேவ் உனதிகட் 21 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தாா். ஒரே ரஞ்சி சீசனில் 65 விக்கெட்டுகள் வீழ்த்திய புதிய சாதனையை படைத்தாா். இதற்கு முன்பு கடந்த 1998-99 சீசனில் கா்நாடக வீரா் தொட்டா கணேஷ் ஒரே சீசனில் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாா்.

ஒரு அணியாக இணைந்து சாதித்தோம்:

நீண்ட காலமாக நாங்கள் ஒரு அணியாக இணைந்து வெற்றி பெற்றோம். எந்த மாநில அணியும் ஒரே அணியாக ஆடுவதில்லை. ஆனால் நாங்கள் தொடா்ந்து ஒன்றிணைந்து ஆடி வருகிறோம். எப்போது சௌராஷ்டிர அணியில் ஆடினாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒரே இலக்கை நோக்கி பயணித்து, பட்டத்தை வென்றுள்ளோம். கடந்த சீசனில் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தோம். அப்போதே அனைவரும் கூடி அடுத்த சீசனில் சிறப்பாக ஆடி பட்டத்தை வெல்ல வேண்டும் என தீா்மானித்துக் கொண்டோம் என புஜாரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com