20-ம் நூற்றாண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர் பி.கே. பானர்ஜி காலமானார்!

வீரராக மட்டுமல்லாமல் பயிற்சியாளராகவும் சாதித்து இந்தியக் கால்பந்தின் நட்சத்திரமாக விளங்கியவர் பானர்ஜி...
20-ம் நூற்றாண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர் பி.கே. பானர்ஜி காலமானார்!

இந்தியக் கால்பந்துப் பிரபலம் பி.கே. பானர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 83.

நிமோனியா காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த பானர்ஜி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். இவருக்கு பெளலா, பூர்ணா என இரு மகள்கள் உண்டு. 

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற பானர்ஜி, இந்திய அணியின் மிகச்சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படுபவர். 2004-ல் இவருடைய பங்களிப்புக்காக விருது அளித்தது ஃபிபா அமைப்பு. அதன்படி 20-ம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கால்பந்து வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.  பத்ம ஸ்ரீ விருது பெற்ற பானர்ஜி, அர்ஜுனா விருது பெற்ற முதல் கால்பந்து வீரர் ஆவார்.

இந்திய அணிக்காக விளையாடிய 84 ஆட்டங்களில் 65 கோல்களை அடித்துள்ளார். 15 வயதில் பிஹாருக்காக சந்தோஷ் கோப்பைப் போட்டியில் அறிமுகமானார் பானர்ஜி. 1936-ல் வடக்கு வங்காளத்தில் பிறந்தவர், பள்ளிக் காலத்தை ஜம்ஷெட்பூரில் கழித்தார். 1954-ல் ஆர்யன் எஃப்.சி. கிளப்பில் விளையாடினார். கிழக்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்த பானர்ஜி, கிழக்கு ரெயில்வே அணி, 1958-ல் கல்கத்தா கால்பந்து லீக் போட்டியை வெல்ல உதவினார். 

இந்தியாவின் மூன்று பெரிய கிளப்களில் விளையாடாமல் 19 வயதில் இந்திய அணிக்குள் அவர் நுழைந்தது சாதனையாகக் கருதப்பட்டது. 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காலிறுதியில் 4-2 எனத் தோற்கடித்து அட்டகாசம் செய்தது. இந்த ஆட்டத்தில் பானர்ஜி அருமையாக விளையாடினார். இந்த ஒலிம்பிக்ஸில் இந்திய அணிக்கு 4-ம் இடம் கிடைத்ததே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. 1960 ரோம் ஒலிம்பிக்ஸில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார் பானர்ஜி. 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. தென் கொரியாவை 2-1 என இந்திய வென்றது இன்றைக்கும் மறக்க முடியாத ஆட்டமாக உள்ளது. இந்தியக் கால்பந்து கடைசியாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றது 1960-ல். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். 1967-ல் கால்பந்து விளையாட்டிலிருந்து பானர்ஜி ஓய்வு பெற்றார். 

வீரராக மட்டுமல்லாமல் பயிற்சியாளராகவும் சாதித்து இந்தியக் கால்பந்தின் நட்சத்திரமாக விளங்கியவர் பானர்ஜி. இவர் பயிற்சியளித்த இந்திய அணி, 1970 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றது. இதுபோன்ற ஒரு சர்வதேசப் போட்டியில் இந்தியக் கால்பந்து அணி கடைசியாக வென்ற பதக்கம் அது. 1972-ல் கிழக்கு பெங்கால் கிளப் அணியின் பயிற்சியாளர் ஆனார். அந்த அணி, 1975-ல் கல்கத்தா கால்பந்து லீக் போட்டியை வெல்ல உதவினார். அடுத்ததாக, மோகன் பகன் கிளப்பின் பயிற்சியாளர் ஆனார். அடுத்த வருடம் அந்த அணி கல்கத்தா கால்பந்து லீக் பட்டம் வென்றது. கிழக்கு பெங்கால் அணி இவருடைய பயிற்சியால் 30 பட்டங்களை வென்று குவித்தது. மிகச்சிறந்த கிளப்களான கிழக்கு பெங்கால், மோகன் பகன் அணிகளுக்குப் பயிற்சியளித்தாலும் அந்த அணிகளுக்காக அவர் விளையாடியதில்லை. ஒரு வீரராகக் காலம் முழுக்க கிழக்கு ரெயில்வே கிளப்புக்காக மட்டுமே விளையாடினார். 

பானர்ஜியின் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com