சிஎஸ்கே வெற்றிக்கும் ஆர்சிபி தோல்விக்கும் காரணம் இதுதான்: ராகுல் டிராவிட் அலசல்

மற்ற அணிகளை விடவும் சிஎஸ்கே அணிக்கு ஒரு சாதகமான நிலை இருந்தது...
சிஎஸ்கே வெற்றிக்கும் ஆர்சிபி தோல்விக்கும் காரணம் இதுதான்: ராகுல் டிராவிட் அலசல்

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அடையாத வெற்றிகள் இல்லை. இதுவரை கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற ஒரே அணி, சிஎஸ்கே தான்.

ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி. அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி.

இரு அணிகளும் ஐபிஎல்-லில் விளையாடுவது குறித்து முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்படும்போது மற்ற அணிகளை விடவும் சிஎஸ்கே அணிக்கு ஒரு சாதகமான நிலை இருந்தது. மற்ற அணிகளை விடவும் சிஎஸ்கே அணியின் உரிமையாளரான இந்திய சிமெண்ட்ஸுக்கு கிரிக்கெட் அணிகளை நிர்வாகம் செய்த அனுபவம் இருந்தது. மிகப்பெரிய அணியை அவர்கள் கொண்டிருந்தார்கள். களத்தில் அவர்களுக்கு ஏற்கெனவே சரியான நபர்கள் இருந்தார்கள். எனவே ஆரம்பத்தில், வீரர்களின் தேர்வில் மற்ற அணிகளை விடவும் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது.

ஆனால் ஆர்சிபி அணி, ஏலத்திலும் அணித்தேர்விலும் சரியாக இல்லை. சரியான அணி ஆர்சிபி அணிக்கு அமையவே இல்லை. மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்தபோது அவர்கள் நிறைய வெற்றிகளைப் பெற்றார்கள். ஆனால் அதிரடி பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். இந்தப் பக்கம், சென்னை அணி ஆர்சிபியை விடவும் திறமையான பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்தது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com