சேவாக் அல்ல, அப்ரிடி தான் அதிரடி டெஸ்ட் தொடக்க வீரர்: வாசிம் அக்ரம் தமாஷ்

அதிரடியாக விளையாடிய டெஸ்ட் தொடக்க வீரர் என்றால் எல்லோருக்கும் சேவாக் தான் ஞாபகத்துக்கு வருவார்.
சேவாக் அல்ல, அப்ரிடி தான் அதிரடி டெஸ்ட் தொடக்க வீரர்: வாசிம் அக்ரம் தமாஷ்

அதிரடியாக விளையாடிய டெஸ்ட் தொடக்க வீரர் என்றால் எல்லோருக்கும் சேவாக் தான் ஞாபகத்துக்கு வருவார். ஆஸி. அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூட இதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சேவாக் அல்ல, சாஹித் அப்ரிடி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடும் நிலையை உருவாக்கினார் என விநோதமான கருத்தொன்றைக் கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் பின்னால் தான் வந்தார். 1999-2000 காலக்கட்டத்தில் டெஸ்ட் தொடக்க வீரர்களின் மனநிலையை மாற்றியவர் சாஹித் அப்ரிடி. ஒரு பந்துவீச்சாளராக என்னால் அப்ரிடியை வீழ்த்த முடியும். அதேசமயம் அவர் என் பந்துகளில் பல பவுண்டரிகளில் அடிப்பார் என்பதையும் அறிந்து வைத்திருப்பேன். மோசமான பந்துகளை அப்ரிடி சிக்ஸருக்கு விரட்டுவார்.

1999-2000-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்ரிடியை முதலில் அணியில் சேர்ப்பதாகவே இல்லை. தேர்வுக்கு முன்பு இம்ரான் கானிடம் நான் பேசினேன். இந்தியச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் அப்ரிடியும் இடம்பெறவேண்டும். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சிலர் மறுக்கிறார்கள் என்று புகார் கூறினேன். அவர் எனக்குச் சம்மதம் சொன்னார். அப்ரிடியைத் தேர்வு செய். அவரைத் தொடக்க வீரராக விளையாட அனுமதிக்கவேண்டும். நிச்சயம் 1-2 டெஸ்டுகளில் வெற்றியைத் தேடித் தருவார் என்றார் இம்ரான். அவரிடம் நான் எப்போதும் ஆலோசனைகள் கேட்பேன். சென்னையில் அற்புதமாக விளையாடினார் அப்ரிடி. கும்ப்ளே, சுனில் ஜோஷி பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தார் என்கிறார் வாசிம் அக்ரம்.

1998-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடக்க வீரராகக் களமிறங்கினார் அப்ரிடி. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சென்னை டெஸ்டில் 141 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் அந்த டெஸ்டில் பாகிஸ்தான் வென்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-1 என வென்றது. எனினும் டெஸ்ட் வீரராக நீண்ட நாள் அப்ரியால் நிலைக்க முடியவில்லை. 27 டெஸ்டுகள் விளையாடி 5 சதங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் சேவாக், 104 டெஸ்டுகள் விளையாடி, 2 முச்சதங்கள் உள்பட 23 சதங்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com