முகப்பு விளையாட்டு செய்திகள்
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் வீரருக்கு ஆறு ஆண்டுகள் தடை
By DIN | Published On : 11th May 2020 10:40 AM | Last Updated : 11th May 2020 10:40 AM | அ+அ அ- |

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட காரணத்துக்காக ஆப்கானிஸ்தான் வீரரான ஷஃபிகுல்லாவுக்கு ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 வயது ஷஃபிகுல்லா ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் ஆட்டத்துக்கான தகுதியை அடைந்தபோது அந்த அணியில் ஷஃபிகுல்லா இடம்பெற்றிருந்தார். இரு டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. 2009 முதல் 2019 வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் 2019-20 வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) டி20 போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஷஃபிகுல்லாவுக்கு ஆறு ஆண்டுகள் தடை விதித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதேபோல 2018 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியிலும் அவர் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஷஃபிகுல்லாவால் எந்த வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
ஊழல் புகாரில் சிக்கிய ஷஃபிகுல்லா ஆப்கானிஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் குறைந்த அளவிலான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்கும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் மேலாளர் சையத் அன்வர் கூறியுள்ளார்.