முகப்பு விளையாட்டு செய்திகள்
4,000 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய சச்சின் டெண்டுல்கர்
By DIN | Published On : 11th May 2020 03:23 PM | Last Updated : 11th May 2020 03:23 PM | அ+அ அ- |

மும்பையில் வருமானம் இல்லாமல் வாடும் 4,000 ஏழைக் குடும்பங்களுக்கு தன்னார்வ அமைப்பின் மூலம் உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பலருடைய அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சிவாஜி நகர் மற்றும் கவந்தி பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சச்சின் டெண்டுல்கர் கடந்த மாதம் வழங்கினார். இத்தகவலை பொதுத்தொண்டு நிறுவனமான அப்னாலயா அமைப்பு தெரிவித்தது. கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கினார் சச்சின். தலா ரூ. 25 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கினார்.
இந்நிலையில் மும்பையில் வருமானம் இல்லாமல் வாடும் 4,000 ஏழைக் குடும்பங்களுக்கு ஹை5 யூத் தன்னார்வ அமைப்பின் மூலம் உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் வழங்கிய தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 67,100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.