ஜூன் 1 முதல் காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு அனுமதி!

ஜூன் 1 முதல் காலி மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தொடர இங்கிலாந்து பிரதமர் அனுமதியளித்துள்ளார்.
ஜூன் 1 முதல் காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு அனுமதி!

ஜூன் 1 முதல் காலி மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தொடர இங்கிலாந்து பிரதமர் அனுமதியளித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 70,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 31,000 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். தி ஹண்ட்ரெட் போட்டியை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த ஓர் அறிவிப்பில், ஜூன் 1 முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார், இந்நிலையில் இங்கிலாந்துப் பிரதமரின் அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து விளையாட்டுப் போட்டிகளை இங்கிலாந்தில் மீண்டும் தொடர்வது குறித்து மத்திய அரசிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. எனினும் விளையாட்டுப் போட்டிகள் குறித்த அரசின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த மாத இறுதியிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்குத் திரும்புவார்கள் என அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com