கே.எல். ராகுலுடனான போட்டி பற்றி ஷிகர் தவனின் வெளிப்படையான கருத்து

யார் யாரை அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்பது தேர்வுக்குழுவினரின் பணி...
கே.எல். ராகுலுடனான போட்டி பற்றி ஷிகர் தவனின் வெளிப்படையான கருத்து

கே.எல். ராகுலின் பங்களிப்பு சமீபகாலமாக அதிகமாக உள்ளதால் இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் கே.எல். ராகுலால் தனக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து ஷிகர் தவன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன். என் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறேன். விளையாட எப்போது வாய்ப்பு வந்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கவேண்டும். அணியில் என்னைத் தேர்வு செய்வது என் கையில் இல்லை.

கடந்த ஒரு வருடமாக, காயம் அடைவதும் மீண்டும் அணிக்குள் வருவதுமாக உள்ளேன். ரன்கள் அடிப்பதுதான் என் வேலை. கடைசியாக விளையாடிய தொடரில் நீண்ட நாள்களுக்குப் பிறகு அரை சதம் அடித்தேன் என நினைக்கிறேன். அதற்கு முன்பு நிறைய 30, 40 ரன்களை எடுத்துள்ளேன்.

கே.எல். ராகுல் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார். மற்றொரு முனையிலிருந்து அவருடைய பேட்டிங்கை மிகவும் ரசித்துள்ளேன். அவர் வேறு லெவலில் உள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் நான் மீண்டும் விளையாட வந்தேன். அந்தத் தொடரில் ராகுல் சிறப்பாக விளையாடினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அந்த ஆட்டத்தை நான் மிகவும் ரசித்தேன்.

நம் அணியில் பல பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி வருகிறார்கள். யார் யாரை அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்பது தேர்வுக்குழுவினரின் பணி. இரண்டு தொடக்க வீரர்கள் வேண்டுமா அல்லது மூன்று பேரா என்பதை அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். கடினமாக உழைக்க வேண்டியது மட்டும் தான் என்னுடைய வேலை என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடினார். ஒருநாள், டி20 எனக் கடந்த 10 இன்னிங்ஸில் ஒரு சதமும் நான்கு அரை சதங்களும் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com