பிரபல வீரர்கள் பங்கேற்கும் டி10 போட்டி: மே 22 முதல் மே.இ. தீவுகளில் தொடக்கம்

கரோனா அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் மே 22 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் டி10 ஓவர் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
பிரபல வீரர்கள் பங்கேற்கும் டி10 போட்டி: மே 22 முதல் மே.இ. தீவுகளில் தொடக்கம்

கரோனா அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் மே 22 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் டி10 ஓவர் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதனால் மார்ச் மாதத்துக்குப் பிறகு பிரபல வீரர்கள் பங்கேற்கும் முதல் போட்டியாக இது அமையப் போகிறது.

ஐந்து நாள் கிரிக்கெட், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக வேறொரு வடிவம் எடுத்தது. பிறகு டி20 கிரிக்கெட், ஆரம்பித்த வேகத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கிடைத்தன. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் அமலுக்கு வந்துள்ளது. எனினும் தற்போது லீக் அளவில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது.

இந்த வருடத்துக்கான அபுதாபி டி10 லீக் போட்டி நவம்பர் 19 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 22 முதல் மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸில் தி வின்சி பிரீமியர் லீக் என்கிற விபிஎல் டி10 கிரிக்கெட் போட்டி மே 31 வரை நடைபெறவுள்ளது.

இந்த வருடம் முதல் அறிமுகமாகும் விபிஎல் டி10 போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. ஐசிசியின் முழு உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் இங்குதான் கரோனா பாதிப்பு நிலவும் இத்தருணத்தில் பிரபல வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. மற்ற அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகள் கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கரோனாவின் பரவலைத் தடுக்க எச்சில், வியர்வையைக் கொண்டு பந்துகளைப் பளபளப்பாக்கத் தடை விதிப்பது குறித்து ஐசிசி விவாதித்து வருகிறது. இதனால் விபிஎல் போட்டியில் பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக எச்சிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸில் கரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 10 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் அரசின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் விபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கெஸ்ரிக் வில்லியம்ஸ், சுனில் அம்ப்ரிஸ் போன்ற பிரபல சர்வதேச வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். வீரர்களும் பார்வையாளர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார்கள். பாதுகாப்பு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.

தினமும் 3 ஆட்டங்கள் என மொத்தமாக விளையாடப்படும் 30 ஆட்டங்களும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்திய ரசிகர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஆட்டங்கள் காலையில் உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணிக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com