கரோனா வைரஸ் தாக்கத்தால் புதிய கிரிக்கெட் விதிமுறைகளைப் பரிந்துரைத்துள்ள ஐசிசி கிரிக்கெட் குழு

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் கும்ப்ளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் புதிய கிரிக்கெட் விதிமுறைகளைப் பரிந்துரைத்துள்ள ஐசிசி கிரிக்கெட் குழு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமான புதிய கிரிக்கெட் விதிமுறைகளை ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமான புதிய கிரிக்கெட் விதிமுறைகளை ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது. ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் கும்ப்ளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கரோனாவின் பரவலைத் தடுக்க எச்சிலைக் கொண்டு பந்துகளைப் பளபளப்பாக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வியர்வைப் பயன்படுத்தி பந்தைப் பளபளப்பாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எச்சில் மூலம் கரோனா வைரஸ் சுலபமாகப் பரவும் என்பதால் இந்த விதிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2002 முதல் வெளிநாட்டு நடுவர்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால் குறிப்பிட்ட காலம் வரை அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் உள்ளூர் நடுவர்களே பங்கேற்பார்கள் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் டிஆர்எஸ் வழியாக நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்குக் கூடுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்ஸில் கூடுதலாக ஒருமுறை மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கும்ப்ளே, டிராவிட், ஷான் பொல்லாக் உள்ளிட்ட கிரிக்கெட் குழுவின் உறுப்பினர்கள் இணையம் வழியாக விவாதித்து ஐசிசிக்கு இந்தப் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார்கள். மே 28 அன்று ஐசிசி குழு இணையம் வழியாகக் கூடி, பரிந்துரைகள் குறித்து இறுதி முடிவை எடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com