மன்கட் செய்வதற்கு முன்பு எச்சரிக்கை கொடுங்கள்: அஸ்வினுக்கு டேவிட் கோவர் அறிவுரை

கிரீஸை விட்டு பட்லர் எவ்வளவு தூரம் சென்றார் என்று பார்த்தால் கிட்டத்தட்ட எங்கும் செல்லவில்லை.
மன்கட் செய்வதற்கு முன்பு எச்சரிக்கை கொடுங்கள்: அஸ்வினுக்கு டேவிட் கோவர் அறிவுரை

அஸ்வின் - பட்லர் ஆகிய இருவரின் தொடர்புடைய மன்கட் சர்ச்சை குறித்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் கருத்து கூறியுள்ளார்.

2019 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் 184 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ஜோஸ் பட்லரின் அபார ஆட்டத்தால் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. 43 பந்துகளில் 69 ரன்களுடன் பட்லர் அபாரமாக ஆடிய நிலையில் 13-ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது 5-ஆவது பந்தில் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்த ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் அஸ்வின்.

ஒரு பந்துவீச்சாளர், பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பந்துவீச்சாளர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் 2019 ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறினார். நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது என்றார் அஸ்வின்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனது கருத்தைக் கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு டேவிட் கோவர் அளித்த பேட்டியில் மன்கட் சர்ச்சை குறித்துக் கூறியதாவது:

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது நான் இந்தியாவில் தான் இருந்தேன். இதுகுறித்த அனைத்துச் செய்திகளையும் படித்தேன். என்னுடைய கருத்தையும் கேட்டதால் மன்கட் சம்பவத்தை நன்குப் பார்த்து அலசி ஆராய்ந்தேன். கிரீஸை விட்டு பட்லர் எவ்வளவு தூரம் சென்றார் என்று பார்த்தால் கிட்டத்தட்ட எங்கும் செல்லவில்லை.

அஸ்வின், அந்தத் தருணத்தில் பந்தை வீசிவிடுவார் என எண்ணியுள்ளார் பட்லர். பந்துவீசும் முன்பு யாராவது கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயன்றால், பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை கொடுங்கள். மீண்டும் அதே காரியத்தைச் செய்தால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. பட்லர் ரன் எடுக்க முயல்கிறார் எனத் தவறாக எண்ணிவிட்டார் அஸ்வின்.

என்னுடைய அறிவுரை - முதலில் எச்சரிக்கை கொடுங்கள். இதன்மூலம் அடுத்த முறை தவறு செய்யும்போது மன்கட் செய்ய உங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் கிடைக்கிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com