மைதானங்களில் பயிற்சியைத் தொடங்கினார்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்.
மைதானங்களில் பயிற்சியைத் தொடங்கினார்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். தி ஹண்ட்ரெட் போட்டியை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் ரூ. 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார்.

எனினும், சில அறிவிப்புகளால் இங்கிலாந்து கிரிக்கெட் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த ஓர் அறிவிப்பில், ஜூன் 1 முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறினார். ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

இதையடுத்து இந்த மாத இறுதியில் இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 18 இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியில் களமிறங்கவுள்ளார்கள். நேற்று முதல் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகிய முன்னணி வீரர்கள் இருவரும் டிரெண்ட் பிரிட்ஜ், எக்பஸ்டன் மைதானங்களில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

பந்துவீச்சாளர்கள் உமிழ்நீரைப் பயன்படுத்த ஐசிசி தடை விதித்துள்ளது. எனினும் பந்தைப் பளபளப்பாக்க வியர்வையைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வியர்வையைப் பயன்படுத்தி பந்தைப் பளபளப்பாக்குவதற்கும் தடை விதித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் ஆரம்பக்கட்டப் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் மட்டுமே பந்துவீச்சாளர்கள் பயிற்சி எடுக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாமல் தனியாகப் பந்துவீச்சுப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். அதேபோல அவர்கள் வீசிய பந்தை அவர்களே வந்து தான் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் பிசியோதெரபிஸ்ட் இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனிப்பார். அடுத்த வாரம் முதல் பயிற்சியாளர்களும் பயிற்சியில் இணைந்துகொள்வார்கள். பேட்ஸ்மேன்களும் விக்கெட் கீப்பர்களும் ஜூன் 1 முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள்.

இந்தப் பயிற்சி குறித்து ஸ்டூவர்ட் பிராட் இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

இந்தப் பயிற்சியை மேற்கொள்ள பலரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. மீண்டும் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டத்தில் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் பயிற்சியின் விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Stuart Broad (@stuartbroad8) on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com