உலகக் கோப்பைக்கு முன்பு 3டி கிரிக்கெட் வீரர் உங்களுக்கு வேண்டுமா?: ராயுடு நீக்கம் பற்றி கம்பீர் - எம்.எஸ்.கே. பிரசாத் காரசார விவாதம்!

எப்போதும் அனுபவம் உள்ள வீரர்களையே தேர்வு செய்ய முடியாது. இதன்மூலம் பல வீரர்களை நாம் இழந்துவிடுவோம்
உலகக் கோப்பைக்கு முன்பு 3டி கிரிக்கெட் வீரர் உங்களுக்கு வேண்டுமா?: ராயுடு நீக்கம் பற்றி கம்பீர் - எம்.எஸ்.கே. பிரசாத் காரசார விவாதம்!

2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக அம்பட்டி ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானார். இதுகுறித்த தொலைக்காட்சி விவாதத்தில் உலகக் கோப்பைப் போட்டியின்போது தேர்வுக்குழுத் தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத்துடன் காரசாரமாக விவாதித்தார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.

இதுபற்றி கம்பீர் கூறியதாவது:

ஒரு வீரர் அணியிலிருந்து நீக்கப்படும்போது அவருக்குச் சரியான முறையில் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. நான், கருண் நாயர், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அம்பட்டி ராயுடுவுக்கும் என்ன ஆனது? இரு வருடங்களாக அவரை விளையாட வைத்தீர்கள். இரு வருடங்களாக நான்காம் நிலை வீரராக விளையாடினார். ஆனால், உலகக் கோப்பைக்கு முன்பு உங்களுக்கு 3டி கிரிக்கெட் வீரர் தேவைப்படுகிறதா? எங்களுக்கு 3டி கிரிக்கெட் வீரர் தேவை என்பதைத்தான் தேர்வுக்குழுத் தலைவரிடமிருந்து கேட்க விரும்புகிறோமா என்றார்.

இதற்குப் பதில் அளித்த பிரசாத், அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் பந்துவீச மாட்டார்கள். நடுவரிசை வீரராக விளையாடுவதோடு பந்துவீச்சிலும் உதவுவார். விஜய் சங்கர் இங்கிலாந்து சூழலுக்கு நன்கு உதவுவார் என்பதால்தான் தேர்வு செய்தோம். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதித்துள்ளார். எப்போதும் அனுபவம் உள்ள வீரர்களையே தேர்வு செய்ய முடியாது. இதன்மூலம் பல வீரர்களை நாம் இழந்துவிடுவோம் என்றார்.

2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், அம்பட்டி ராயுடுவால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறமுடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் (3 டைமன்ஷன் திறமை) ஆகிய மூன்றை அடிப்படையாக வைத்து விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்று தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இதற்கு விளக்கமளித்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு, உலகக் கோப்பை போட்டியைக் காண 3டி கண்ணாடியை வாங்கவுள்ளேன் என்று வேடிக்கையாகவும், அதே நேரம் வேதனையுடன் ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் கடந்த வருட ஜூலை மாதம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ராயுடு. பிறகு மனம் மாறி, தன்னுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இதுவரை 55 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு, 1694 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும் 10 அரை சதங்களும் எடுத்துள்ளார். மேலும், ஆறு சர்வதேச டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com