ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும்?: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் பதில்

இந்த வருடம் சில விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று...
ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும்?: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் பதில்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஐபிஎல் பற்றி கூறியதாவது:

ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான். கரோனா பரவலை நாம் எந்தளவுக்குத் தடுத்துள்ளோம், கரோனா தடுப்புப் பணிகளில் எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதைப் பொறுத்தே இதுபற்றிய முடிவை எடுக்க முடியும். விளையாட்டுப் போட்டி வேண்டும் என்பதற்காக நாட்டு மக்களின் உடல்நலத்தில் விளையாட முடியாது. அரசின் தற்போதைய கவனம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே உள்ளது.

எனினும் விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பு பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உடனடியாக ஒரு பெரிய போட்டியை அனுமதிக்க முடியாது. பார்வையாளர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த நாம் முன்வர வேண்டும். ஐபிஎல் எப்போது தொடங்கும் எனக் கூற முடியாது. ஆனால் இந்த வருடம் சில விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் நிலைமை குறித்து ஒரு பேட்டியில் செளரவ் கங்குலி கூறியதாவது: எங்களுடைய நிதி நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். கைவசம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகு ஒரு முடிவெடுக்கவேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பு ஏற்படும். இந்த இழப்பு மிகவும் பெரியது. ஐபிஎல் நடைபெறாவிட்டால் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும். குறைவான ரசிகர்களைக் கொண்டு ஐபிஎல் போட்டி நடத்தினாலும் பல பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com