டெஸ்ட் வாய்ப்பை இழந்த பெர்த் மைதானம்: இந்திய விமானம் எங்களைத் தாண்டி செல்லும்போது கண்ணீர் விடுவோம்!

எங்களுக்கு மேலே இந்திய கிரிக்கெட் அணியின் விமானம் வேறொரு பக்கத்துக்குப் பறந்து செல்லும்போது சிறிது கண்ணீர் விடுவோம்
டெஸ்ட் வாய்ப்பை இழந்த பெர்த் மைதானம்: இந்திய விமானம் எங்களைத் தாண்டி செல்லும்போது கண்ணீர் விடுவோம்!

இந்த வருட இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கான அட்டவணையை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெர்த் மைதானம் வாய்ப்பை இழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர், ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் பேசியது, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இத்தொடருக்கு முன்பு நவம்பர் 21-25 தேதிகளில் பெர்த்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. இத்தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெர்த் மைதானம் வாய்ப்பை இழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தைத் தங்களுக்கு வழங்காததற்கு பெர்த் மைதானத்தை நிர்வகிக்கும் தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியன் கிரிக்கெட் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பெர்த்தில் WACA, பெர்த் என இரு கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இதில் பெர்த் மைதானம் சமீபத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த இரு சீஸன்களாக இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்கள் பெர்த் மைதானத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால், இந்தமுறை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நவம்பர் 21-25 தேதிகளில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியன் கிரிக்கெட் அமைப்பின் சேர்மன் டெரி வால்டிரான் கூறியதாவது:

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு எங்களுக்கு வேதனையைத் தந்துள்ளது. இது தவறான முடிவு எனக் கருதுகிறோம். எதனால் இந்த முடிவை எடுத்தார்கள் என எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உலகின் மிகச்சிறந்த மைதானங்களில் ஒன்றை நாங்கள் வைத்துள்ளோம். சிறந்த 2-வது கிரிக்கெட் மைதானமும் இதுதான். இந்திய ரசிகர்களுக்கான செளகரியமான நேரமும் பெர்த்தில் உள்ளது. எதனால் இப்படி ஒரு முடிவு? இருந்தும் நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுப்போம்.

பிரிஸ்பேனை விடவும் எங்களுடைய மைதானம் சிறந்தது என்பதைக் கடந்த சில வருடங்களில் நிரூபித்துள்ளோம். எங்களுடைய கிரிக்கெட் மைதானத்துக்காக 10,000 உறுப்பினர்கள் ஆதரவளிக்கிறார்கள். அவர்களுக்கு நெ.1 டெஸ்ட் அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தை எங்களால் வழங்க முடியவில்லை. ரசிகர்களை மனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள சில நாள்களாகும். எனினும் எங்களுக்கு மேலே இந்திய கிரிக்கெட் அணியின் விமானம் வேறொரு பக்கத்துக்குப் பறந்து செல்லும்போது சிறிது கண்ணீர் விடுவோம் என்றார்.

2018-2019-ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)

3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்

4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com