இதுவரை கொடுத்த விலை போதாதா?: அலெக்ஸ் ஹேல்ஸுக்கு ஆதரவாகப் பேசும் முன்னாள் கேப்டன்!

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ்...
இதுவரை கொடுத்த விலை போதாதா?: அலெக்ஸ் ஹேல்ஸுக்கு ஆதரவாகப் பேசும் முன்னாள் கேப்டன்!

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ், 21 நாள்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

கிரிக்கெட் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட முறையில் போதை மருந்து பயன்படுத்திய ஹேல்ஸ் மீது 21 நாள்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பரிசோதனையில் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்ததால் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளோம். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம் இங்கிலாந்து வீரர்கள் கவனச் சிதறல்கள் எதுவுமின்றி தங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக ஹேல்ஸ் எண்ணக்கூடாது. அவருக்குத் தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் ஈசிபி நிர்வாகம் வழங்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) நிர்வாக இயக்குநர் ஆஸ்லி ஜைல்ஸ் கூறினார்.

31 வயது ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 11 டெஸ்டுகள், 70 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்றார். எனினும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார். கரோனா ஊரடங்குக்கு முன்பு, பிஎஸ்எல் போட்டியில் பங்கேற்றார்.

அலெக்ஸ் ஹேல்ஸ், அந்தத் தடைக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், இங்கிலாந்து அணிக்குள் ஹேல்ஸ் திரும்ப இன்னும் சிறிது நாளாகும் என்றார்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ஹேல்ஸின் தடை பற்றி கூறியதாவது:

அவர் ஒரு குற்றம் செய்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து, உலகக் கோப்பை வெற்றியையும் தவறவிட்டுவிட்டார். லார்ட்ஸ் மைதானத்தின் சிறந்த நாள் அவருக்கு அமையவில்லை. இந்த விலை போதாதா? இதற்கு மேலும் தான் செய்த தவறுக்காக அவர் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகள் இருக்கக்கூடாது. அவருக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் எப்படி விளையாட முடியும்? அவரிடம் இந்தளவுக்குக் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com