கரோனா வைரஸ் மாற்று வீரர்: ஐசிசியிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

டெஸ்ட் ஆட்டத்தின் நடுவில் கரோனா வைரஸால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்ய...
கரோனா வைரஸ் மாற்று வீரர்: ஐசிசியிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

டெஸ்ட் ஆட்டத்தின் நடுவில் கரோனா வைரஸால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைச் சமீபத்தில் வெளியிட்டது ஐசிசி.

மைதானத்தில் நடுவர்களும் வீரர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். நடுவரிடம் தொப்பி, கண்ணாடி, துண்டு ஆகியவற்றை வீரர்கள் இனிமேல் தரக்கூடாது. சக வீரர்களிடமும் அவற்றைத் தர தடை செய்யப்படுகிறது என இதுபோன்ற பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டது. விளையாட்டில் பங்கு பெறும் வீரர் யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வைரஸ் தொற்று உறுதியானாலோ உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இதையடுத்து இரு அணி வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஐசிசியின் புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் ஆட்டத்தின் நடுவில் கரோனா வைரஸால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

ஐசிசி விதிமுறைகளின்படி ஆட்டத்தின் நடுவே ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களமிறங்கி ஃபீல்டிங் செய்வார். பேட்டிங் செய்யவோ பந்துவீசவோ அனுமதி கிடையாது. சமீபத்திய விதிமுறையின்படி பவுன்சர் பந்தால் எந்த ஒரு பேட்ஸ்மேனாவது தாக்கப்பட்டு மயக்க நிலைக்குச் சென்றால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அணியில் இடம்பெற்று பேட்டிங் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி அடுத்த சில மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்டுகளில் எந்த ஒரு வீரராவது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அனுமதிக்க வேண்டும் என இதுதொடர்பாக ஐசிசியிடம் விவாதித்து வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

டெஸ்டுக்கு மட்டுமே மாற்று வீரருக்கான அனுமதி கேட்டுள்ளோம். ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு அல்ல. டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு இதற்கான அனுமதியை ஐசிசி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com