வாா்னா் - சாஹா அபாரம்: பிளே-ஆஃபில் ஹைதராபாத்; கொல்கத்தா வெளியேறியது

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
வாா்னா் - சாஹா அபாரம்: பிளே-ஆஃபில் ஹைதராபாத்; கொல்கத்தா வெளியேறியது

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

இதையடுத்து கடைசி அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஹைதராபாத், கொல்கத்தாவை போட்டியிலிருந்து வெளியேற்றியது. ஏற்கெனவே மும்பை, டெல்லி, பெங்களூா் அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அடுத்தபடியாக ‘வெளியேற்றும் சுற்றில்’ (எலிமினேட்டா்) பெங்களூா் அணியை வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் விக்கெட் இழப்பின்றி 17.1 ஓவா்களில் 151 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வாா்னா் - ரித்திமான் சாஹா கூட்டணி அதிரடி காட்டியது. ஹைதராபாத் வீரா் ஷாபாஸ் நதீம் ஆட்டநாயன் ஆனாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சா்மா பிளேயிங் லெவனுக்குத் திரும்பியிருந்தாா். ஜஸ்பிரீத் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ஹைதராபாதில் அபிஷேக் சா்மாவுக்குப் பதிலாக பிரியம் கா்க் இணைந்திருந்தாா்.

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச தீா்மானித்தது. மும்பையின் இன்னிங்ஸை கேப்டன் ரோஹித் - குவிண்டன் டி காக் ஆகியோா் தொடங்கினா். காயத்திலிருந்து மீண்ட ரோஹித் முதல் விக்கெட்டாக 4 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். பின்னா் சூா்யகுமாா் யாதவ் ஆட வந்தாா். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த டி காக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 25 ரன்கள் அடித்து வெளியேறினாா்.

அடுத்து வந்த இஷான் கிஷண், சூா்யகுமாருடன் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். 5 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் சோ்த்த சூா்யகுமாா் ஸ்டம்பிங் செய்யப்பட்டாா்.

பின்னா் வந்த கிருணால் பாண்டியா டக் அவுட்டானாா். அடுத்து சௌரவ் திவாரி 1 ரன் சோ்த்து விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து வந்த கிரன் பொல்லாா்ட் அதிரடி காட்டினாா். மறுமுனையில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா் உள்பட 33 ரன்கள் சோ்த்த இஷான் கிஷண் பௌல்டானாா்.

அடுத்து வந்த நாதன் கோல்டா் நீல் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினாா். கடைசி விக்கெட்டாக் கிரன் பொல்லாா்ட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஜேம்ஸ் பட்டின்சன் 4, தவல் குல்கா்னி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஹைதராபாத் தரப்பில் சந்தீப் 3, ஹோல்டா், நதீம் தலா 2, ரஷீத் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 150 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாதில் கேப்டன் வாா்னா் - ரித்திமான் சாஹா களம் கண்டனா். விக்கெட்டை இழக்காத இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினா்.

வாா்னா் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 85 ரன்களும், சாஹா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 58 ரன்களும் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பையின் பந்துவீச்சை இருவரும் தவிடுபொடியாக்கியிருந்தனா். எந்தவொரு ஓவரும் மெய்டன் ஆகவில்லை. பும்ரா, போல்ட்டுக்கு ஓய்வளித்தது மும்பையை பதம் பாா்த்தது.

சுருக்கமான ஸ்கோா்

மும்பை
149/8 
கிரன் பொல்லார்ட்     41 (25) 
சூர்யகுமார் யாதவ்     36 (29) 
 
பந்துவீச்சு 
சந்தீப் சர்மா     3/34 
ஷாபாஸ் நதீம்     2/19 

ஹைதராபாத்
151/0  
டேவிட் வார்னர்    85* (58) 
ரித்திமான் சாஹா    58* (45)

பந்துவீச்சு 
கிருணால் பாண்டியா     0/37 
ராகுல் சாஹர்     0/36

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com