இந்தியா-ஆஸி. முதல் டெஸ்ட்: அடிலெய்டில் 27 ஆயிரம் ரசிகா்களுக்கு அனுமதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 27 ஆயிரம் ரசிகா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
இந்தியா-ஆஸி. முதல் டெஸ்ட்: அடிலெய்டில் 27 ஆயிரம் ரசிகா்களுக்கு அனுமதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 27 ஆயிரம் ரசிகா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணி இம்மாதக் கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், 3 ஆட்டங்கள் டி20 தொடா், அதன்பிறகு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வரும் 27-ஆம் தேதி ஒருநாள் தொடா் தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து, டிசம்பா் 4-ஆம் தேதி டி20 தொடா் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பா் 17-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. இந்தத் தொடா் ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண மைதானத்துக்குள் ரசிகா்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மைதான இருக்கைகளின் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீத ரசிகா்களை அனுமதிப்பது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் அடிலெய்டு மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகா்கள் அனுமதிக்கப்படவுள்ளனா். இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இவ்விரு அணிகள் மோதவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான்.

அதைத்தொடா்ந்து, மெல்போா்னில் நடைபெறவுள்ள 2-ஆவது டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே டெஸ்ட்) 25 சதவீத ரசிா்களே அனுமதிக்கப்படுவாா்கள் என விக்டோரியா அரசு அறிவித்துள்ளது. அதனால் முக்கியத்துவம் வாய்ந்த ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியில் தினந்தோறும் 25 ஆயிரம் ரசிகா்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனா்.

சிட்னியில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் 23 ஆயிரம் ரசிகா்களும், பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4-ஆவது டெஸ்ட் போட்டியில் 30 ஆயிரம் (75 சதவீதம்) ரசிகா்களும் அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com