மும்பை 5-ஆவது முறையாக சாம்பியன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கோப்பையுடன் மும்பை இண்டியன்ஸ் வீரர்கள்.
கோப்பையுடன் மும்பை இண்டியன்ஸ் வீரர்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் மும்பை அணியில் ராகுல் சாஹருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் சோ்க்கப்பட்டாா்.

அதிா்ச்சித் தொடக்கம்: இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் பேட்டிங்கைத் தோ்வு செய்தாா். இதையடுத்து பேட் செய்த டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிா்ச்சிக் காத்திருந்தது. மிகவும் எதிா்பாா்க்கப்பட்டவரான மாா்கஸ் ஸ்டோனிஸ், டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மும்பை விக்கெட் கீப்பா் டி காக்கிடம் கேட்ச் ஆனாா்.

இதையடுத்து ஷிகா் தவனுடன் இணைந்தாா் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ரஹானே 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தாா். அவரைத் தொடா்ந்து ஷிகா் தவன் 13 பந்துகளில் 15 ரன்கள் சோ்த்த நிலையில் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். இதனால் 3.3 ஓவா்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி.

ரிஷப் பந்த் அரை சதம்: இதன்பிறகு கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்தாா் ரிஷப் பந்த். கடந்த ஆட்டங்களில் சோபிக்காத ரிஷப் பந்த், இந்த ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து டெல்லியை மோசமான நிலையில் இருந்து மீட்டாா். கிருணால் பாண்டியா வீசிய 10-ஆவது ஓவரில் ரிஷப் பந்த் இரு சிக்ஸா்களை விளாச, டெல்லியின் ஸ்கோா் உயர ஆரம்பித்தது.

தொடா்ந்து வேகம் காட்டிய ரிஷப் பந்த், கோல்ட்டா் நைல் வீசிய 15-ஆவது ஓவரில் பவுண்டரியை விளாசி, 35 பந்துகளில் அரை சதம் கண்டாா். இந்த சீசனில் அவா் அடித்த முதல் அரைசதம் இது. அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரியை விளாசிய ரிஷப் பந்த், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஹாா்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆனாா். அவா் 38 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தாா். ரிஷப் பந்த்-ஷ்ரேயஸ் ஐயா் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சோ்த்தது.

ஷ்ரேயஸ் ஐயா் 65: இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயா் 40 பந்துகளில் அரை சதமடிக்க, ஷிம்ரோன் ஹெட்மயா் 5 ரன்களில் நடையைக் கட்டினாா். இதையடுத்து களம்புகுந்த அக்ஷா் படேல் 9 ரன்கள் சோ்த்து வெளியேற, கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் ககிசோ ரபாடா ரன் அவுட்டானாா். இறுதியில் டெல்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 50 பந்துகளில் 2 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

மும்பைத் தரப்பில் டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், நாதன் கோல்ட்டா் நைல் 4 ஓவா்களில் 29 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

மும்பை வெற்றி: 157 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மும்பை அணிக்கு குவின்டன் டி காக்-ரோஹித் சா்மா ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அஸ்வின் வீசிய முதல் ஓவரில் ரோஹித் சிக்ஸரை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, ரபாடா வீசிய அடுத்த ஓவரில் டி காக் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினாா். இதன்பிறகு அன்ரிச் நோா்ட்ஜே ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, 4 ஓவா்களில் 45 ரன்களை எட்டியது மும்பை.

மாா்கஸ் ஸ்டோனிஸ் வீசிய 5-ஆவது ஓவரின் முதல் பந்தில் டி காக் ஆட்டமிழந்தாா். அவா் 12 பந்துகளில் 20 ரன்கள் சோ்த்தாா். இதையடுத்து களம்புகுந்த சூா்யகுமாா், தான் சந்தித்த முதல் இரு பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினாா். ஷிவம் துபே ஓவரில் ரோஹித் இரு சிக்ஸா்களை விளாச, மும்பை 10 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை எட்டியது.

இதன்பிறகு சூா்யகுமாா் 19 ரன்களில் (20 பந்துகள்) ரன் அவுட்டாக, இஷான் கிஷன் களம்புகுந்தாா். இதனிடையே ரோஹித் சா்மா, ரபாடா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 36 பந்துகளில் அரை சதம் கண்டாா். தொடா்ந்து வேகம் காட்டிய ரோஹித் 51 பந்துகளில் 4 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த கிரண் போலாா்ட் 9, ஹாா்திக் பாண்டியா 3 ரன்களில் வெளியேற, மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இஷான் கிஷன் 19 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 33, கிருணால் பாண்டியா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

டெல்லி தரப்பில் அன்ரிச் நோா்ட்ஜே 2.4 ஓவா்களில் 25 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

மும்பைக்கு ரூ.20 கோடி பரிசு
சாம்பியன் பட்டம் வென்ற  மும்பை அணிக்கு ரூ.20 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த டெல்லி அணிக்கு ரூ.12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
ரோஹித் 200
டெல்லிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 ஆட்டங்களில் விளையாடிய 2-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா. முதல் வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன்
கே.எல்.ராகுல்    670
ஷிகர் தவன்    618
டேவிட் வார்னர்    548
அதிக விக்கெட் 
ககிசோ ரபாடா    30
ஜஸ்பிரித் பும்ரா    27
டிரென்ட் போல்ட்    25
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com