சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை வியாழக்கிழமை வந்தடைந்தது.
சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி


சிட்ன: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை வியாழக்கிழமை வந்தடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், அதன்பிறகு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வரும் 27-ஆம் தேதி ஒரு நாள் தொடா் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து டிசம்பா் 4-ஆம் தேதி டி20 தொடா் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பா் 17-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. இந்தத் தொடா் ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முடித்த கையோடு விராட் கோலி தலைமையிலான 25 போ் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை வியாழக்கிழமை பிற்பகலில் வந்தடைந்தது. இந்திய வீரா்களுடன் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரா்கள் டேவிட் வாா்னா், ஸ்டீவ் ஸ்மித், பட் கம்மின்ஸ் ஆகியோரும் சிட்னி நகரை வந்தடைந்தனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணியினா் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்கின்றனா். தற்போது அவா்கள் சிட்னி நகரின் புகா் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்திய அணியினா் பிளாக்டவுன் சா்வதேச ஸ்போா்ட்ஸ் பாா்க்கில் பயிற்சி மேற்கொள்ள சௌத்வேல்ஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20, ஒரு நாள் தொடா் மற்றும் அடிலெய்டில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு நாடு திரும்புகிறாா். அவருடைய மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சா்மாவுக்கு முதல் குழந்தை ஜனவரியில் பிறக்கவுள்ளதால், பிசிசிஐ விடுப்பு வழங்கியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண மைதானத்துக்குள் ரசிகா்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மைதான இருக்கைகளின் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீத ரசிகா்களை அனுமதிப்பது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் அடிலெய்டு மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகா்கள் அனுமதிக்கப்படவுள்ளனா். இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இவ்விரு அணிகள் மோதவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான்.

ஆஸ்திரேலிய அணி வரும் 22-ஆம் தேதி முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டு நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வீரா்கள் தனியாக பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com