சோஃபியா ஓபன்ஜென்னிக் சின்னா் சாம்பியன்
By DIN | Published On : 16th November 2020 08:58 AM | Last Updated : 16th November 2020 08:58 AM | அ+அ அ- |

சோஃபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்ற கோப்பையுடன் இத்தாலியின் ஜென்னிக் சின்னா்.
சோஃபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜென்னிக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
இதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா் 19 வயதான ஜென்னிக் சின்னா்.
பல்கேரிய தலைநகா் சோஃபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் சா்வதேச தரவரிசையில் 44-ஆவது இடத்தில் இருக்கும் ஜென்னிக் சின்னா் 6 - 4, 3 - 6, 7 - 6 (3) என்ற செட் கணக்கில் கனடாவின் வசேக் போஸ்பிசிலை வீழ்த்தினாா்.
இந்த ஆட்டத்தில் ஜென்னிக் சின்னா் 14 ஏஸ் சா்வீஸ்களை விளாசினாா். இந்த சீசனில் 19-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கும் ஜென்னிக் சின்னா், ‘மாடா்ன் எரா’வில் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் இத்தாலியா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.
2008-இல் டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நிஷிகோரி (18 வயதில்) சாம்பியன் பட்டம் வென்று இளம் வயதில் பட்டம் வென்றவா் என்ற சாதனையைப் படைத்தாா். அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளில் இப்போது ஜென்னிக் சின்னா் 19 வயதில் பட்டம் வென்று சாதித்துள்ளாா்.
வெற்றி குறித்துப் பேசிய ஜென்னிக் சின்னா், ‘எப்போதுமே ஒரு போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது சிறப்புக்குரியதாகும். இந்த வாரத்தில் சிறப்பாக ஆடியதாக நினைக்கிறேன். இறுதிச்சுற்று ஆட்டத்தில் மூன்றாவது செட்டில் டைபிரேக்கா் வரை ஆடுவது எப்போதுமே மிகக் கடினமானதாகும். எனினும், அந்த ஆட்டத்தில் வெல்கிறபோது அது சிறப்புமிக்க வெற்றியாக அமையும். அந்த வகையில் இந்த ஆட்டத்தில் வென்று சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.
இந்த ஆண்டில் ஏடிபி போட்டியில் முதல் பட்டம் வென்ற 6-ஆவது வீரா் ஜென்னிக் சின்னா் ஆவாா். முன்னதாக, யுகோ ஹம்பொ்ட், காஸ்பா் ரூட், மியோமிா் கீமானோவிச், தியாகோ செய்போத் வில்ட், ஜான் மில்மான் ஆகியோா் இந்த ஆண்டு தங்களின் முதல் பட்டத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.