போட்டி நடுவர்கள் தொடர்ந்து  நன்றாக செயல்பட வேண்டும்

கால்பந்து விளையாட்டில் வீரர்களின் மதிப்பைப் பெறுவதற்கு போட்டி நடுவர்கள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட வேண்டும் என்று "ஃபிஃபா' அமைப்பில் உள்ள இந்திய நடுவர் ரோவன் ஆறுமுகன் கூறினார். 
போட்டி நடுவர்கள் தொடர்ந்து  நன்றாக செயல்பட வேண்டும்


புது தில்லி: கால்பந்து விளையாட்டில் வீரர்களின் மதிப்பைப் பெறுவதற்கு போட்டி நடுவர்கள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட வேண்டும் என்று "ஃபிஃபா' அமைப்பில் உள்ள இந்திய நடுவர் ரோவன் ஆறுமுகன் கூறினார். 
கடந்த 2011-ஆம் ஆண்டு லயோனல் மெஸ்ஸி தலைமையில் ஆர்ஜெண்டீனா அணி வெனிசூலா அணியை நட்பு ரீதியிலாக எதிர்கொண்ட கால்பந்தாட்டத்தில் போட்டி நடுவராக ரோவன் ஆறுமுகன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: 
போட்டி நடுவராகச் செயல்படுவதற்கு அணிகள் மற்றும் அதிலுள்ள வீரர்கள் குறித்து அறிந்திருப்பதும் முக்கியத் தேவையாகும். 
எந்தெந்த வீரர்கள் திறமையான ஆட்டக்காரர்கள் என்பதைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அந்த வீரர்கள் தான் ஆட்டத்தின்போது களத்தில் நடுவருக்கு அதிகம் சவால் அளிப்பார்கள். 
போட்டு நடுவர்கள் ஒரு ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, அடுத்த ஆட்டத்தில் சரியாகச் செயல்படவில்லை என்றால் பலன் கிடைக்காது. தொடர்ந்து நன்றாகச் செயல்படும் பட்சத்தில்தான் வீரர்களின் மதிப்பைப் பெற இயலும். அவ்வாறு மதிப்பைப் பெற்றுவிட்டால் "இந்த நடுவர் அவரது பணியை சரியாகச் செய்வார்' என்ற எண்ணத்துடன் வீரர்கள் செயல்படுவர். இது ஆட்டத்தின் போக்கை எளிதாக்கும். 
போட்டிக்கு முன்பாக மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் தியானத்தில் ஈடுபடுவதும் நல்ல பலன் தரும். அதேபோல் ஆண்டு முழுவதும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதும் பிரதானமாகும். 
ஆட்டத்தின் விதிகள் குறித்து முழுமையாக அறிந்திருப்பதும் அவசியமாகும். இதில் எதில் குறையிருந்தாலும் பலனில்லை. 
அதேபோல், ஒரு போட்டியை தகுந்த முறையில் நடத்த இதர நடுவர்களுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டு ஒரு அணியாகச் செயல்படுவதும் அவசியமாகும் என்று ரோவன் ஆறுமுகன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com