மாஸ்டர்ஸ் ஹாக்கி: ஊக்குவிப்பு குழுவில் முன்னாள் வீரர்கள் பர்கத், மிர்

அனைத்து வயதினருக்குமான "மாஸ்டர்ஸ் ஹாக்கி' விளையாட்டை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் முன்னாள் கேப்டன் பர்கத் சிங், மிர் ரஞ்சன் நெகி, குர்பக்ஸ் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
மாஸ்டர்ஸ் ஹாக்கி: ஊக்குவிப்பு குழுவில் முன்னாள் வீரர்கள் பர்கத், மிர்


புது தில்லி: அனைத்து வயதினருக்குமான "மாஸ்டர்ஸ் ஹாக்கி' விளையாட்டை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் முன்னாள் கேப்டன் பர்கத் சிங், மிர் ரஞ்சன் நெகி, குர்பக்ஸ் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
சர்வதேச அளவில் மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டிகளை நடத்த சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் (எஃப்ஐஹெச்) அங்கீகரிக்கப்பட்ட உலக மாஸ்டர்ஸ் ஹாக்கி அமைப்பின் உறுப்பினராக இந்தியா கடந்த மார்ச் மாதம் இணைந்தது. அதில் ஏற்கெனவே 38 நாடுகளின் ஹாக்கி சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. 
இந்நிலையில், மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டிக்கான பொறுப்புகளை மாநில அளவில் நிர்வகிப்பதற்கு செயற்குழு ஒன்றை அமைக்குமாறும், அதில் முன்னாள் தேசிய மற்றும் சர்வதேச ஹாக்கி வீரர்களை உறுப்பினர்களாக நியமிக்குமாறும் மாநில சங்கங்களுக்கு ஹாக்கி இந்தியா அறிவுறுத்தியிருந்தது. 
இதையடுத்து ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் குழு அமைக்கப்பட்டது. ஹர்பிந்தர் சிங் தலைமையிலான இந்தக் குழுவில் ஆர்.பி. சிங் அமைப்பாளராகவும், முன்னாள் வீரர்கள் பி.பி. கோவிந்தா, ஜக்பீர் சிங், ஏ.பி. சுப்பையா, சுரிந்தர் கெüர், என். ரேணுகா லக்ஷ்மி உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். தற்போது அதில் பர்கத், நெகி, குர்பக்ஸ் ஆகியோரும் இணைந்துள்ளனர். 
இந்தியாவில் அனைத்து வயதிலும் உள்ள ஹாக்கி வீரர், வீராங்கனைகள் தங்களை மாநில சங்கங்களில் பதிவு செய்துகொள்வதை உறுதி செய்வதே இந்தக் குழுவின் முதல் பொறுப்பாகும். ஆடவர், மகளிர் என அனைவரும் ஹாக்கி விளையாட்டுக்கான தங்களது இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இந்தக் குழு வழங்கும் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com