இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகளாக இனவெறி கலாசாரம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தில் (இசிபி) பல ஆண்டுகளாக இனவெறி கலாசாரம் இருப்பதாகவும், 
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகளாக இனவெறி கலாசாரம்

லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தில் (இசிபி) பல ஆண்டுகளாக இனவெறி கலாசாரம் இருப்பதாகவும், அதுகுறித்து சுதந்திரமான அமைப்பு கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் டெஸ்ட் நடுவர் ஜான் ஹோல்டர் கூறினார். 
முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹோல்டர், கடந்த 30 ஆண்டுகளில் 11 டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். 
இந்நிலையில், "இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ'-வுக்கு அளித்த நேர்க்காணலில் அவர் கூறியதாவது: 
இங்கிலாந்தில் 56 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். நான் நேரடியாக எந்தவொரு இனவெறி நடவடிக்கைகளுக்கும் ஆளானதில்லை. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நியமனங்களை ஊடுருவிப் பார்த்தால் அதில் நீண்டகாலமாக இனவெறி கலாசாரம் இருந்தது தெரியவரும். 
நான் ஐசிசி-க்காக பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட பிறகு இங்கிலாந்து கிரிக்கெட்டில் பணியாற்ற வாரியத்தை தொடர்புகொண்டேன். ஆனால் அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக நடுவராக அனுபவம் இல்லாத முன்னாள் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளித்தார்கள். இது நகைப்புக்குரியது. 
இறுதியாக கடந்த 1992-இல் வெள்ளையினத்தைச் சாராத வான்பர்ன் ஹோல்டர் முதல்தர கிரிக்கெட்டுக்கான நடுவராக நியமிக்கப்பட்டார். 
அதன் பிறகு வெள்ளையினத்தைச் சாராத வேறு எவருமே அந்த கிரிக்கெட்டில் நடுவராக நியமிக்கப்பட்டதில்லை. சிறந்த கிரிக்கெட் வீரரான டிவோன் மால்கம்முக்கே அதில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் எனக்கு எவ்வாறு வாய்ப்பு கிடைக்கும்? 
வெள்ளையினத்தவர்களையே முதல்தர கிரிக்கெட்டுக்கான நடுவராக நியமிக்க வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதாக சந்தேகிக்கிறேன். இதுகுறித்து சுந்திர அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜான் ஹோல்டர் கூறினார். 
இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய இஸ்மாயில் தாவூதும் தனக்கு நடுவர் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து முன்னர் கூறியிருந்தார். எனினும், அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பணியாற்றும் கலாசாரத்தை கொண்டிருப்பதாகவும், நியமனங்களில் நியாயமான நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com