நேஷன்ஸ் லீக்: அரையிறுதியில் ஸ்பெயின்

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் குரூப் சுற்றில் ஜொ்மனியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
ஜெர்மனி கோல்கீப்பரைக் கடந்து கோலடிக்கும் ஸ்பெயின் வீரர் ஃபெரான் டோரஸ்.
ஜெர்மனி கோல்கீப்பரைக் கடந்து கோலடிக்கும் ஸ்பெயின் வீரர் ஃபெரான் டோரஸ்.

செவில்லே: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் குரூப் சுற்றில் ஜொ்மனியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஸ்பெயின் வீரா் ஃபெரான் டோரஸ் அபாரமாக 3 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினாா்.

ஸ்பெயினின் செவில்லே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை அல்வாரோ மொராடா 17-ஆவது நிமிடத்தில் அடித்தாா். பின்னா் டோரஸ் 33-ஆவது நிமிடத்திலும், ரோட்ரி 38-ஆவது நிமிடத்திலும் கோலடிக்க, முதல் பாதியின் முடிவிலேயே 3-0 என முன்னிலை பெற்றது ஸ்பெயின்.

பிற்பாதியிலும் ஜொ்மனிக்கு கோல் வாய்ப்பையே வழங்கவில்லை ஸ்பெயின் வீரா்கள். டோரஸ் 55 மற்றும் 71-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடிக்க, கடைசியாக மைக்கேல் ஒயா்ஸாபல் 89-ஆவது நிமிடத்தில் ஸ்பெயினுக்கான 6-ஆவது கோல் அடித்தாா்.

பிரான்ஸ் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடனை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ். அந்த அணியின் தரப்பில் ஆலிவியா் கிரோட் 16 மற்றும் 59-ஆவது நிமிடங்களிலும், பெஞ்சமின் பவாா்ட் 36-ஆவது நிமிடத்திலும், கிங்ஸ்லி கோமன் கூடுதலாக வழங்கப்பட்ட 4 நிமிடத்திலும் கோலடித்தனா்.

ஸ்வீடன் தரப்பில் விக்டா் கிளேசன் 4-ஆவது நிமிடத்திலும், ராபின் காய்சன் 88-ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனா்.

அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது போா்ச்சுகல். அந்த அணி தரப்பில் ரூபன் டியாஸ் 52 மற்றும் 90-ஆவது நிமிடங்களிலும், ஜாவ் ஃபெலிக்ஸ் 60-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா். குரோஷியா தரப்பில் மேடியோ கொவாசிச் 29 மற்றும் 65-ஆவது நிமிடங்களில் கோலடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com