உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: புதிய விதிமுறையால் இந்திய அணிக்குச் சிக்கல்!

நியூசிலாந்து அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: புதிய விதிமுறையால் இந்திய அணிக்குச் சிக்கல்!

வெற்றிகளின் சதவீத அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இரு அணிகள் தேர்வாகும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் இந்திய அணிக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களுக்கே பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் டெஸ்ட் ஆட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்கும் வகையில் ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டி கடந்த 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூஸிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, மே.இ. தீவுகள் உள்ளிட்ட 9 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 6 தொடா்களில் ஆடுகின்றன. இதில் 3 தொடா் உள்ளூரிலும், 3 தொடா்கள் எதிரணி நாட்டிலும் நடைபெறும்.

ஒரு தொடா் வெற்றிக்கு 120 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மேலும் 2 ஆட்டங்கள் தொடா் என்றால் ஒரு ஆட்டத்துக்கு 60 புள்ளிகளும், 3 ஆட்டங்கள் தொடா் என்றால் தலா 40 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. 4 ஆட்டங்கள் தொடா் என்றால் ஒரு ஆட்டத்துக்கு 30 புள்ளிகளும், 5 ஆட்டங்கள் தொடா் என்றால் ஒரு ஆட்டத்துக்கு 24 புள்ளிகளும் ஒதுக்கப்படும். டையில் முடிந்தால் இருக்கும் புள்ளிகளில் 50 சதவீதம் கிடைக்கும். மேலும் ஆட்டம் டிராவில் முடிந்தால் 3:1 என்ற சதவீத அடிப்படையில் புள்ளிகள் ஒதுக்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடா் 2019-2021 வரை நடைபெறும். இரண்டாவது தொடா் 2021-23 வரை நடைபெறும்.

ஆஸி. 19, வங்கதேசம் 14, இங்கிலாந்து 22, இந்தியா 18, நியூஸிலாந்து 13, பாகிஸ்தான் 13, தென் ஆப்பிரிக்கா 16, இலங்கை 13, மே.இ. தீவுகள் 14 ஆட்டங்களில் ஆடுகின்றன.

புள்ளிகளின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் 2021 ஜூன் 10 முதல் 14-ஆம் தேதி வரை இறுதி டெஸ்ட் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல டெஸ்ட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல அணிகளால் அதிகப் புள்ளிகளைப் பெற முடியாமல் போகும் என்பதால் அணிகள் பெற்றுள்ள வெற்றிகளின் சதவீத அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கான இரு அணிகளைத் தேர்வு செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது அனைத்தும் மாறியுள்ளன.

புள்ளிகளின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள அணிகள்

1. இந்தியா - 360 புள்ளிகள்
2. ஆஸ்திரேலியா - 296 புள்ளிகள்
3. இங்கிலாந்து - 292 புள்ளிகள்
4. நியூசிலாந்து - 180 புள்ளிகள்
5. பாகிஸ்தான் - 166 புள்ளிகள்

வெற்றிகளின் சதவீத அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள அணிகள்

1. ஆஸ்திரேலியா - 82.22&
2. இந்தியா - 75.00%
3. இங்கிலாந்து - 60.83%
4. நியூசிலாந்து - 50.00%
5. பாகிஸ்தான் - 39.52%

இந்தப் புதிய நடைமுறையால் நியூசிலாந்து அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து அணி முழுமையாக வெற்றி பெற்றால் 240 புள்ளிகளைப் பெறும். இதன்மூலம் வெற்றி சதவீதம் 70% ஆக உயரும் (600 புள்ளிகளில் 420 புள்ளிகள்). 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்டுகளிலும் தோற்று இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் 66.67% ஆக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-0 எனத் தோற்றாலும் வெற்றி சதவீதம் 69.44% ஆக இருக்கும். 

எனவே நியூசிலாந்து அணி தனது அடுத்த இரு தொடர்களையும் முழுமையாக வென்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com