ஐபிஎல் போட்டியில் காயத்துடன் விளையாடியது ஏன்?: தன் மீதான புகார்களுக்கு ரோஹித் சர்மா விளக்கம்

என்னுடைய காயம் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நிஜமாகவே எனக்குத் தெரியாது.
ஐபிஎல் போட்டியில் காயத்துடன் விளையாடியது ஏன்?: தன் மீதான புகார்களுக்கு ரோஹித் சர்மா விளக்கம்

ஐபிஎல் போட்டியின் கடைசிப் பகுதியில் காயத்துடன் விளையாடியது தொடர்பாக ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கேப்டனாக ஐந்தாவது முறையும் வீரராக ஆறாவது முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று மகத்தான ஐபிஎல் வீரராகப் பெயர் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.

ஐபிஎல் போட்டியின்போது ரோஹித் சர்மாவுக்குத் தொடை பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவர் இடம்பெறவில்லை. எனினும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். சக வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள், பயிற்சியாளர்களின் கண்காணிப்பில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார் ரோஹித் சர்மா. 

ஐபிஎல் போட்டியின் பிற்பகுதியில் காயத்துடன் விளையாடியது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரோஹித் சர்மா பேட்டியளித்ததாவது:

என்னுடைய காயம் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நிஜமாகவே எனக்குத் தெரியாது. பிசிசிஐ, மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு நிர்வாகங்களிடமும் என்னுடைய காயம் பற்றி தொடர்ச்சியாகத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தேன். 

டி20 ஆட்டம் என்பதால் காயம் இருந்தாலும் என்னால் ஆட்டத்தில் பங்கேற்க முடியும், நிலைமையைச் சமாளிக்க முடியும் என மும்பை அணியிடம் சொன்னேன். காயம் குறித்த தெளிவு கிடைத்த பிறகு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது. 

காயத்திலிருந்து குணமாகி வருகிறேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளேன். டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் முன்பு எல்லாவிதமான சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட வேண்டும். அதனால் தான் பெங்களூருக்கு வந்துள்ளேன். 

என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதையும் நான் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியுமா என்கிற சந்தேகங்களையும் நான் பொருட்படுத்தவில்லை. காயம் ஏற்பட்ட பிறகு அடுத்த இரு நாள்களில் அதைப் பற்றி தீவிரமாகக் கண்காணித்தேன். அடுத்த பத்து நாள்களுக்கு என்னால் விளையாட முடியுமா என யோசித்தேன். 

காயத்தின் நிலை தினமும் மாறியது. நன்கு தேறி வந்தேன். என்னால் விளையாட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதால் தான் மும்பை அணியினரிடம் இதுபற்றி பேசினேன். பிளேஆஃப்புக்கு முன்பு விளையாடுகிறேன். அதில் எனக்குச் சிரமம் ஏற்பட்டால் பிளேஆஃப்பில் விளையாட மாட்டேன் என்றேன். இன்னும் என்னுடைய காயத்திலிருந்து முழுமையாகக் குணமாக வேண்டும். 

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து ஆட்டங்கள் நடைபெறுவதால் ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கவில்லை (12 நாள்களில் ஆறு ஆட்டங்கள்). 25 நாள்களுக்கு என்னுடைய உடலுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டு பயிற்சிகள் மேற்கொண்டால் என்னால் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட முடியும். இது எனக்குத் தெளிவான முடிவாக இருந்தது. இதைப் பற்றி ஏன் மற்றவர்கள் குழப்பிக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com