ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன் தான்: கபில் தேவ் பாராட்டு

அந்த இளம் வீரருக்குப் பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார்... 
ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன் தான்: கபில் தேவ் பாராட்டு

ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தான் என முன்னாள் வீரர் கபில் தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அனைவர் கவனத்தையும் கவர்ந்தார் நடராஜன்.

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

யார்க்கர் பந்தை வீசுவது மிகவும் கடினம் என அனைவரும் எண்ணுகிற நிலையில் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள நடராஜனின் பந்துவீச்சு, கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார். 

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகினார். இதனால் தமிழக வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் கபில் தேவ், ஐபிஎல் போட்டி பற்றி கூறியதாவது:

ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன் தான். அந்த இளம் வீரருக்குப் பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர் தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல, கடந்த 100 வருடங்களாகவே. யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளைச் சரியாக அவர் பின்பற்றினார். 

இன்றைய வேகப்பந்து வீச்சாளர்கள் மீது எனக்கு வருத்தம் உள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர்கள், வேகமாகப் பந்து வீசுவதை விடவும் ஸ்விங் தான் முக்கியம் என்பதை அறிந்துள்ளார்கள். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சந்தீப் சர்மா, பந்தை நன்கு ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களுக்குக் கடினமான சூழலை உருவாக்கினார். எனவே வேகமல்ல, ஸ்விங் தான் முக்கியம் என்பதைப் பந்துவீச்சாளர்கள் அறிய வேண்டும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com