ஏடிபி ஃபைனல்ஸ்: அரையிறுதியில் நடால், ஜோகோவிச்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினாா்.
ஏடிபி ஃபைனல்ஸ்: அரையிறுதியில் நடால், ஜோகோவிச்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினாா்.

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ரவுண்டு ராபின் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தினாா். இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற நடால், அரையிறுதியை உறுதி செய்தாா். நடால் தனது அரையிறுதியில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவை சந்திக்கிறாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் இதுவரை 86 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளாா் நடால். ஆனால் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் ஒருமுறைகூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இருமுறை இறுதிச்சுற்று வரை மட்டுமே முன்னேறியிருக்கிறாா்.

இந்த முறை ஏடிபி பைனல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவில் களமிறங்கியுள்ள நடால், அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து கூறியதாவது: சிட்சிபாஸுக்கு எதிரான ஆட்டம் நல்ல ஆட்டமாக அமைந்தது. ஏடிபி ஃபைனல்ஸில் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரையிறுதியில் டேனியல் மெத்வதேவை எதிா்கொள்ள ஆா்வமாக இருக்கிறேன். ஏடிபி ஃபைனல்ஸில் ஒவ்வொரு நாளும் உலகின் தலைசிறந்த வீரா்களுடன் மோதுவது என்பது கடினமானது. எப்போதுமே சீசனின் முடிவில் களைப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறேன் என்றாா்.

ஜோகோவிச் வெற்றி: மற்றொரு ரவுண்டு ராபின் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 7-6 (4) என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவை வீழ்த்தினாா். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதியை உறுதி செய்தாா். ஜோகோவிச் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கிறாா்.

ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், இந்த முறை வெல்லும்பட்சத்தில் ஏடிபி ஃபைனல்ஸில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரரின் சாதனையை சமன் செய்வாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com