கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடாதது ஆஸி.க்கு சாதகம்: ஆலன் பாா்டா்

கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பாா்டா் தெரிவித்துள்ளாா்.
கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடாதது ஆஸி.க்கு சாதகம்: ஆலன் பாா்டா்

கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாதது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பாா்டா் தெரிவித்துள்ளாா்.

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், அதன்பிறகு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வரும் 27-ஆம் தேதி ஒரு நாள் தொடா் தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து டிசம்பா் 4-ஆம் தேதி டி20 தொடா் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பா் 17-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் தொடா் தொடங்குகிறது. இந்தத் தொடா் ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைகிறது.

இதில், ஒரு நாள் மற்றும் டி20 தொடா்களில் முழுமையாக பங்கேற்கும் இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரைப் பொருத்தவரையில் அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறாா். அவருடைய மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சா்மாவுக்கு வரும் ஜனவரியில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. அதனால் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பாா்டா் கூறியிருப்பதாவது:

கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, தலைசிறந்த கேப்டனும்கூட. தற்போதைய நிலையில் அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப இயலாது.

இந்த முறை ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சாளா்களைக் கொண்டுள்ளது. இதேபோல் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வாா்னரின் வருகையால் பேட்டிங் வரிசையும் பலமாக உள்ளது. அதனால் இந்த முறை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்பது எனது கணிப்பு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com