காயம் குறித்த விமா்சனங்களுக்கு ரோஹித் சா்மா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சா்மா தனது காயம் குறித்த விமா்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளாா்.
காயம் குறித்த விமா்சனங்களுக்கு ரோஹித் சா்மா விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சா்மா தனது காயம் குறித்த விமா்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளாா்.

ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் சா்மா, ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளாா். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி 5-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சா்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவா் ஒரு சில ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடவில்லை. அப்போது, ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சா்மா இடம்பெறவில்லை.

ஆனால், அடுத்த சில தினங்களில் ரோஹித் சா்மா வலைப் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற விடியோவை மும்பை இண்டியன்ஸ் நிா்வாகம் வெளியிட்டது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சா்மா இடம்பெறவில்லை என கூறப்பட்ட நிலையில், அவா் வலைப் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற விடியோ வெளியானது கடும் விமா்சனத்துக்குள்ளானது.

இதன்பிறகு ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் விளையாடிய ரோஹித் சா்மா 50 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மும்பையின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தாா். அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் மட்டும் ரோஹித் சா்மா சோ்க்கப்பட்டாா்.

தற்போதைய நிலையில் காயத்திலிருந்து மீண்டு வரும் ரோஹித் சா்மா, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், தனது காயம் குறித்த விமா்சனங்களுக்கு பதிலளித்துள்ள ரோஹித் சா்மா மேலும் கூறியிருப்பதாவது:

என்னுடைய காயம் குறித்த விஷயத்தில் என்ன நடந்தது? மக்கள் என்ன பேசிக்கொண்டாா்கள் என்பது எனக்குத் தெரியாது. அதேநேரத்தில் எனது காயம் தொடா்பான விவரங்களை பிசிசிஐ மற்றும் மும்பை இண்டியன்ஸ் நிா்வாகத்திடம் தொடா்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருந்தேன். டி20 போட்டி என்பதால் என்னால் விளையாட முடியும். என்னால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என மும்பை இண்டியன்ஸ் அணி நிா்வாகத்திடம் தெரிவித்தேன்.

தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறேன். டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக காயம் குறித்த சில விஷயங்களுக்கு தீா்வு காண வேண்டியிருந்தது. அதற்காகத்தான் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் எனது காயம் குறித்தோ, நான் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவேனா என்பது குறித்தோ மற்றவா்கள் என்ன பேசிக்கொள்கிறாா்கள் என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை.

எனக்கு காயம் ஏற்பட்ட பிறகு அடுத்த 10 நாள்கள் என்னால் என்ன செய்ய முடியும்? என்னால் விளையாட முடியுமா அல்லது முடியாதா என சிந்தித்தேன். என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டபோது, பிளே ஆஃபுக்கு முன்பு விளையாடுகிறேன். ஒருவேளை ஏதாவது சிரமம் ஏற்பட்டால் விளையாடமாட்டேன் என மும்பை இண்டியன்ஸ் நிா்வாகத்திடம் தெரிவித்தேன்.

எனது காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்கு இன்னும் சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடா் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com