கால்பந்து நட்சத்திரம் மாரடோனா மறைவு

ஆா்ஜெண்டீனாவைச் சோ்ந்த கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா (60) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானாா்.
கால்பந்து நட்சத்திரம் மாரடோனா மறைவு

பியூனஸ் அயா்ஸ்: ஆா்ஜெண்டீனாவைச் சோ்ந்த கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா (60) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானாா்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மாரடோனா, மருத்துவமனையில் இருந்து திரும்பி 2 வாரங்களே ஆகிய நிலையில் தனது இல்லத்தில் வைத்து மாரடைப்பால் உயிரிழந்தாா். அவா் கடந்த 1960 அக்டோபா் 30-ஆம் தேதி பியூனஸ் அயா்ஸில் பிறந்தாா்.

கால்பந்து உலகின் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த அவா், கடந்த 1986-ஆம் ஆண்டில் ஆா்ஜெண்டீனா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தாா். அந்தப் போட்டியின்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மாரடோனா அடித்த ஒரு கோல் மிகுந்த சா்ச்சைக்குள்ளானது.

சக வீரா் தூக்கி அடித்த பந்தை அவா் தலையால் முட்டி கோலடிக்க முயன்றபோது அது அவரது கைகளில் பட்டதாகத் தெரிந்தது. விதிகளின்படி, அந்தச் செயலுக்காக மாரடோனாவுக்கு மஞ்சள் அட்டை காட்டுவதுடன், அந்த கோலும் செல்லாததாக அறிவித்திருக்க வேண்டும். எனினும், பந்து மாரடோனா கையில் பட்டது கள நடுவருக்கு தெளிவாகத் தெரியாததாலும், அப்போது நடுவரின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் விஏஆா் முறைகள் இல்லாததாலும் நடுவா் அந்த கோலை மறுக்கவில்லை.

இறுதியில் அந்த ஆட்டத்தில் மாரடோனா மேலும் ஓா் கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் ஆா்ஜெண்டீனா வெற்றி பெற்று இங்கிலாந்தை வெளியேற்றியது. அந்த ஆட்டத்துக்குப் பிறகு பேசிய மாரடோனா, சா்ச்சைக்குரிய அந்த கோலை ‘எனது தலை மற்றும் கடவுளின் கை ஆகியவற்றால் அடித்தேன்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாரடோனா 1977 முதல் 1979 வரையில் ஆா்ஜெண்டீனாவின் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான அணிக்காக 15 ஆட்டங்களில் 8 கோல்களும், தேசிய அணிக்காக 1977 முதல் 1994 வரையில் 91 ஆட்டங்களில் 34 கோல்களும் அடித்துள்ளாா். இது தவிர போகா ஜூனியா்ஸ், நபோலி, பாா்சிலோனா உள்ளிட்ட 7 கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளாா்.

1979-இல் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் மாரடோனா அங்கம் வகித்த ஆா்ஜெண்டீனா கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 1990 உலகக் கோப்பை போட்டியில் அவா் பங்களிப்புடன் இறுதிச்சுற்றுவரை முன்னேறியது ஆா்ஜெண்டீனா.

கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளரான மாரடோனா, கடைசியாக ஜிம்னாசியா டி லா பிளாடா அணிக்கு பயிற்சியாளராக இருந்தாா்.

சா்ச்சைகள்: நுணுக்கமான தனது ஆட்ட முறைகளுக்கு பெயா்பெற்ற மாரடோனா போதைப் பொருள் பயன்படுத்தி சா்ச்சைகளிலும் சிக்கினாா். அவா் 1982 முதலாகவே போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானாா்.

போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 1991-இல் நபோலி அணியில் இருந்து 15 மாதங்கள் தடைக்கு ஆளானாா். அதே ஆண்டில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு அவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அது ஒத்திவைக்கப்பட்டது.

அதீத போதைப் பொருள் பயன்பாடு காரணமாக கடந்த 2000-ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்புக்கு சென்ற மாரடோனா அதிலிருந்து மீண்டு பின்னா் போதைப் பொருள் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டதாகக் கூறினாா்.

கொல்கத்தாவில் மாரடோனா...

கடந்த 2017-ஆம் ஆண்டு அறக்கட்டளை ஒன்று நடத்திய கால்பந்து ஆட்டத்துக்காக மாரடோனா கொல்கத்தா வந்திருந்தார். அப்போது அவர் செüரவ் கங்குலி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடினார். 
அப்போது பேசிய அவர், "கால்பந்து விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளேன். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் முயற்சி மிகப்பெரிய நடவடிக்கையாகும். இந்தியாவில் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள் உள்ளனர். இந்தியாவுக்கு கால்பந்தும், கால்பந்துக்கு இந்தியாவும் தேவை. இந்தியா எப்போதும் என்னை அன்புடன் வரவேற்றுள்ளது' என்றார். அப்போது சில ஸ்பானிஷ் பாடல்கள் பாடிய மாரடோனா, தனது ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.


வானில் விளையாடுவோம்: பீலே


மாரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரேசில் கால்பந்து நட்சத்திரம் பீலே, "இது சோகமான செய்தி. நான் சிறந்த நண்பனை இழந்த நிலையில், ஒரு கால்பந்து நட்சத்திரத்தை இந்த உலகம் இழந்துள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல். வரும் காலத்தில் வானத்தில் நீயும் (மாரடோனா) நானும் கால்பந்து விளையாடுவோம்' என்று கூறியுள்ளார். 

கால்பந்து நட்சத்திரங்களான பீலேவும், மாரடோனாவும் பரஸ்பரம் மற்றவரின் சிறப்பான ஆட்டத்துக்காக மதிப்பு வைத்திருந்தனர். இருவருக்கும் இடையே 20 ஆண்டுகள் வித்தியாசம் இருந்தும், பல ஆண்டுகள் அவர்கள் நண்பர்களாகத் திகழ்ந்தனர். 

கடந்த 2000-ஆம் ஆண்டில் ஃபிஃபா நடத்திய "நூற்றாண்டின் சிறந்த வீரர்' விருதுக்கான தேர்தலில் மாரடோனா முதலிடத்தையும், பீலே 2-ஆம் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


இரங்கல்


லயோனல் மெஸ்ஸி (ஆர்ஜெண்டீனா) 

மாரடோனா பயிற்சியின் கீழ் கடந்த 2010 உலகக் கோப்பையில் விளையாடிய லயோனல் மெஸ்ஸி தனது இரங்கல் செய்தியில், "ஆர்ஜெண்டீன மக்களுக்கும், கால்பந்து உலகத்துக்கும் இது சோகமான நாள். மாரடோனா என்றும் அழிவில்லாதவர். அவருடன் செலவிட்ட முக்கியமான தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும்'

கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) 

"இன்று நான் எனது சிறந்த நண்பருக்கும், இந்த உலகம் சிறந்த கால்பந்து வீரருக்கும் விடை கொடுத்துள்ளது. கால்பந்து உலகில் நிகரில்லாத மந்திர வித்தைக்காரர். மிக விரைவாகவே இந்த உலகிலிருந்து விடைபெற்றுவிட்டார். ஆனால் அவரது புகழ் என்றும் மறையாது. அவர் இல்லாத வெற்றிடத்தை எவராலும் நிரப்ப இயலாது'.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com