உங்களுக்காகவே கால்பந்து ஆட்டங்களைப் பார்த்தேன்: மாரடோனாவுக்கு இரங்கல் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

கால்பந்து என்றால் மாரடோனா. மாரடோனா என்றால் கால்பந்து.
உங்களுக்காகவே கால்பந்து ஆட்டங்களைப் பார்த்தேன்: மாரடோனாவுக்கு இரங்கல் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

மாரடோனாவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ஆா்ஜெண்டீனாவைச் சோ்ந்த கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனா (60) மாரடைப்பால் நேற்று காலமானாா்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மாரடோனா, மருத்துவமனையில் இருந்து திரும்பி 2 வாரங்களே ஆகிய நிலையில் தனது இல்லத்தில் வைத்து மாரடைப்பால் உயிரிழந்தாா். அவா் கடந்த 1960 அக்டோபா் 30-ஆம் தேதி பியூனஸ் அயா்ஸில் பிறந்தாா்.

கால்பந்து உலகின் நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த அவா், கடந்த 1986-ஆம் ஆண்டில் ஆா்ஜெண்டீனா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தாா். 1990 உலகக் கோப்பை போட்டியில் அவா் பங்களிப்புடன் இறுதிச்சுற்றுவரை முன்னேறியது ஆா்ஜெண்டீனா.

மாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் எனக் குடியரசுத் தலைவர் ஆல்பெர்டோ அறிவித்துள்ளார். 

இந்நிலையில் மாரடோனாவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு:

செளரவ் கங்குலி

என்னுடைய ஹீரோ தற்போது உயிருடன் இல்லை. என்னுடைய மேதையின் ஆன்மா சாந்தியடையட்டும். உங்களுக்காகவே கால்பந்து ஆட்டங்களைப் பார்த்தேன்.

சச்சின் டெண்டுல்கர்

கால்பந்தும் உலகின் அனைத்து விளையாட்டுகளும் அதனுடைய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். 

விராட் கோலி

கால்பந்து விளையாடிய விதத்தை மாற்றிக் காட்டியவர் மாரடோனா. உண்மையான மேதை. 

ரவி சாஸ்திரி

நீங்கள் விளையாடிய காலகட்டத்தில் எங்களுக்கு அளித்த அற்புதமான தருணங்களுக்கு நன்றி. தன் காலில் கால்பந்தைக் கட்டுப்படுத்திக் காட்டியவர். கால்பந்து விளையாட்டை விளையாடிய மிகச்சிறந்த வீரர். 

ஆகாஷ் சோப்ரா

இளம் வயதில் கால்பந்து என்றால் மாரடோனா. மாரடோனா என்றால் கால்பந்து. 2020 மற்றொரு பொக்கிஷத்தை எடுத்துக்கொண்டு விட்டது.

வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி

என்னுடைய இளம் வயது ஹீரோ உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்தவர். அவருடைய உடை எண் 10 எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் தான் நான் அணியும் ஆட்ட உடையில் அந்த எண்ணைச் சேர்த்துள்ளேன். ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இழப்பை நான் எண்ணுவேன். 

ஜெயவர்தனே

மிகவும் சோகமான செய்தி. உங்களால் தான் கால்பந்து ஆட்டங்களை நான் பார்க்க ஆரம்பித்தேன்.

சுரேஷ் ரெய்னா

மிகப்பெரிய இழப்பு. நம் இளம் வயது ஹீரோ, ஏராளமான நினைவுகளைப் போற்றவும் கொண்டாடவும் வழங்கியுள்ளார். எங்கள் இதயங்களிலும் நினைவுகளிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

விவிஎஸ் லக்‌ஷ்மண்

விளையாட்டின் மிகச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர். உலக விளையாட்டுகளுக்கு இது சோகமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இர்பான் பதான்

என் இளம் வயதில் நான் கால்பந்து விளையாட்டுகளை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. ஆனால் மாரடோனா என்றால் யார் என எனக்குத் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com