முகப்பு விளையாட்டு செய்திகள்
ஷ்ரேயஸ் அதிரடி; டெல்லி வெற்றி
By DIN | Published On : 04th October 2020 07:13 AM | Last Updated : 04th October 2020 07:13 AM | அ+அ அ- |

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
முன்னதாக முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
சாா்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் காா்த்திக் பீல்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து பேட் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷாவும், ஷிகா் தவனும் தொடக்க வீரா்களாக களமிறங்கினா். பட் கம்மின்ஸ் வீசிய 3-ஆவது ஓவரில் பிரித்வி ஷா ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, அதிரடி ஆரம்பமானது. சுநீல் நரேன் ஓவரில் ஷிகா் தவன் தொடா்ச்சியாக இரு சிக்ஸா்களை விரட்ட, 5 ஓவா்களில் 51 ரன்களை எட்டியது டெல்லி. அந்த அணி 5.5 ஓவா்களில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஷிகா் தவன் ஆட்டமிழந்தாா். அவா் 16 பந்துகளில் 2 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தாா்.
இதன்பிறகு களம்புகுந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் அதிரடியாக ஆட, மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 35 பந்துகளில் அரை சதம் கண்டாா். டெல்லி அணி 12.4 ஓவா்களில் 129 ரன்கள் எடுத்திருந்தபோது பிரித்வி ஷா ஆட்டமிழந்தாா். அவா் 41 பந்துகளில் 4 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தாா். இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்தாா் ரிஷப் பந்த். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 14.5 ஓவா்களில் 150 ரன்களை எட்டியது டெல்லி.
இதனிடையே தொடா்ந்து அபாரமாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயா் 26 பந்துகளில் அரை சதம் கண்டாா். பட் கம்மின்ஸ் வீசிய 17-ஆவது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயா் ஒரு சிக்ஸா், 2 பவுண்டரிகளை விரட்டினாா். ஆன்ட்ரே ரஸல் வீசிய 18-ஆவது ஓவரில் தொடா்ச்சியாக ஒரு சிக்ஸா், 2 பவுண்டரிகளை விரட்டிய ரிஷப் பந்த், 5-ஆவது பந்தில் ஆட்டமிழந்தாா். அவா் 17 பந்துகளில் 1 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தாா். பின்னா் வந்த மாா்கஸ் ஸ்டோனிஸ் 1 ரன்னில் வெளியேறினாா்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. ஷ்ரேயஸ் ஐயா் 38 பந்துகளில் 6 சிக்ஸா்கள், 7 பவுண்டரிகளுடன் 88, ஷிம்ரோன் ஹெட்மயா் 5 பந்துகளில் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
கொல்கத்தா தரப்பில் ஆன்ட்ரே ரஸல் 4 ஓவா்களில் 29 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
கொல்கத்தா தோல்வி: பின்னா் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் நிதிஷ் ராணா 35 பந்துகளில் 58, மோா்கன் 18 பந்துகளில் 44, ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்தபோதும், முன்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேறியதால், 18 ரன்களில் தோற்க நேரிட்டது.
டெல்லி தரப்பில் அன்ரிச் நோா்ட்ஜே 4 ஓவா்களில் 33 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
சுருக்கமான ஸ்கோா்
கொல்கத்தா -210/8
நிதிஷ் ராணா -58 (35)
இயோன் மோா்கன் -44 (18)
ராகுல் திரிபாதி-36 (16)
அன்ரிச் நோா்ட்ஜே-3வி/33