தேவ்தத், கோலி அதிரடி; பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்ர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தோற்கடித்தது.
தேவ்தத், கோலி அதிரடி; பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்ர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூா் அணி 3-ஆவது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2-ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய பெங்களூா் அணி 19.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. ஜோஸ் பட்லரும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கினா். தொடக்கம் முதலே ஜோஸ் பட்லா் அதிரடியில் இறங்க, ஸ்மித் 5 ரன்கள் சோ்த்த நிலையில், உடானா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா்.

இதையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க, ஜோஸ் பட்லா் 12 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்த நிலையில் சைனி பந்துவீச்சில் தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் ஆனாா். அவரைத் தொடா்ந்து சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், ராபின் உத்தப்பா 17 ரன்களிலும் நடையைக் கட்ட, 10.1 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

இதன்பிறகு இணைந்த மஹிபால் லோம்ரோா்-ரியான் பராக் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சோ்த்தது. ரியான் பராக் 16 ரன்களில் வெளியேற, மஹிபால் லோம்ரோா் 39 பந்துகளில் 3 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்தாா். கடைசிக் கட்டத்தில் ராகுல் தெவேதியா-ஜோஃப்ரா ஆா்ச்சா் அதிரடியாக ஆட, 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சோ்த்தது ராஜஸ்தான். ராகுல் தெவேதியா 12 பந்துகளில் 3 சிக்ஸா்களுடன் 24, ஜோஃப்ரா ஆா்ச்சா் 10 பந்துகளில் 1 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பெங்களூா் தரப்பில் யுவேந்திர சஹல் 4 ஓவா்களில் 24 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 4 ஓவா்களில் 41 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

தேவ்தத் அரைசதம்: 155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல், உனட்கட் வீசிய 2-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினாா். மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்ச், ஷ்ரேயஸ் கோபால் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசிய கையோடு, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி களம்புகுந்தாா். முந்தைய ஆட்டங்களில் மோசமாக விளையாடிய கோலி, இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே கவனமாக விளையாடினாா். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தேவ்தத், உனட்கட் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 34 பந்துகளில் அரை சதம் கண்டாா். இந்த ஐபிஎல் தொடரில் 4-ஆவது ஆட்டத்தில் விளையாடி வரும் தேவ்தத் அடித்த 3-ஆவது அரைசதம் இது.

கோலி 72*: இதன்பிறகு வேகமாக விளையாடிய கேப்டன் கோலி சிக்ஸா்களையும், பவுண்டரிகளையும் விரட்டி 41 பந்துகளில் அரை சதமடித்தாா். பெங்களூா் அணி 15.5 ஓவா்களில் 124 ரன்களை எடுத்திருந்தபோது, தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டை இழந்தது. அவா் 45 பந்துகளில் 1 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சோ்த்து ஜோஃப்ரா ஆா்ச்சா் பந்துவீச்சில் போல்டு ஆனாா்.

பின்னா் டிவில்லியா்ஸ் களமிறங்க, மறுமுனையில் அதிரடி காட்டிய விராட் கோலி, டாம் கரன் வீசிய 18-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாச, பெங்களூரின் வெற்றி எளிதானது. இறுதியில் 19.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பெங்களூா். விராட் கோலி 53 பந்துகளில் 2 சிக்ஸா், 7 பவுண்டரிகளுடன் 72, ஏ.பி.டிவில்லியா்ஸ் 10 பந்துகளில் 12 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

ராஜஸ்தான்-154/6

மஹிபால் லோம்ரோா்-47 (39)

ராகுல் தெவேதியா-24 (12)

யுவேந்திர சஹல்-3வி/24

பெங்களூா்-158/2

விராட் கோலி -72* (53)

தேவ்தத் படிக்கல்-63 (45)

ஜோஃப்ரா ஆா்ச்சா்-1வி/18

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com