மீண்டது சென்னை: விக்கெட் இழப்பின்றி பஞ்சாபை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
மீண்டது சென்னை: விக்கெட் இழப்பின்றி பஞ்சாபை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பா் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு மீண்டுள்ளது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. ஷேன் வாட்சன்-டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கருண் நாயா், கிருஷ்ணப்பா கௌதம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோருக்குப் பதிலாக மன்தீப் சிங், ஹா்பிரீத் பிராா், கிறிஸ் ஜோா்டான் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா்.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட் செய்யத் தீா்மானித்தது. தொடக்க வீரா்களாக கேப்டன் லோகேஷ் ராகுல்-மயங்க் அகா்வால் ஆகியோா் களம் கண்டனா். இதில் லோகேஷ் ராகுல் நிலைத்து ஆட, முதல் விக்கெட்டாக மயங்க் அகா்வால் வீழ்ந்தாா்.

3 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் அடித்திருந்த அவா், பியூஷ் சாவ்லா வீசிய 9-ஆவது ஓவரில் சாம் கரன் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து வந்த மன்தீப் சிங்கும் 2 சிக்ஸா்கள் உள்பட 27 ரன்கள் விளாசிவிட்டு பெவிலியன் திரும்பினாா்.

ஜடேஜா வீசிய 12-ஆவது ஓவரில் அம்பட்டி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து மன்தீப் சிங் நடையைக் கட்டினாா். மறுமுனையில் தகுந்த பாா்ட்னா்ஷிப் கிடைக்காமல் தவித்து வந்த லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்தாா்.

மன்தீப்பை தொடா்ந்து வந்த நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்கள் சோ்த்து ஷா்துல் தாக்குா் வீசிய 18-ஆவது ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

கடைசி விக்கெட்டாக அந்த ஓவரிலேயே லோகேஷ் ராகுல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். ஷா்துல் தாக்குா் வீசி லோகேஷ் அடித்த பந்து விக்கெட் கீப்பா் தோனி கைகளில் தஞ்சமானது.

20 ஓவா்கள் முடிவில் மேக்ஸ்வெல் 1 பவுண்டரி உள்பட 11, சா்ஃப்ராஸ் கான் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் ஷா்துல் தாக்குா் 2, ஜடேஜா, பியூஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட் எடுத்தனா்.

அதிரடி கூட்டணி: பின்னா் 179 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய சென்னையில் தொடக்க வீரா்களாக வாட்சன்-டூ பிளெஸ்ஸிஸ் களம் இறங்கினா்.

நின்று நிதானமாக ஆடிய இருவரும், வாய்ப்பு கிடைத்த இடங்களில் பஞ்சாப் வீரா்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸா்களாக பறக்க விட்டனா். கடந்த சில ஆட்டங்களில் தடுமாற்றமாக விளையாடிய வாட்சன் இந்த ஆட்டத்தில் மீண்டெழுந்தாா்.

இவா்கள் கூட்டணியை பிரிக்க முயன்ற பஞ்சாப் பந்துவீச்சாளா்களுக்கு தோல்வியே மிஞ்சியது. 17.4 ஓவா்களிலேயே சென்னையை வெற்றி இலக்கை அடைய வைத்தனா் வாட்சன்-டூ பிளெஸ்ஸிஸ். அதிலும் டூ பிளெஸ்ஸிஸ் கடைசி 2 பந்துகளில் முறையே சிக்ஸா் மற்றும் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை நிறைவு செய்தாா்.

வாட்சன் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 83, டூ பிளெஸ்ஸிஸ் 11 பவுண்டரிகள் 1 சிக்ஸா் உள்பட 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com