சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி இந்த ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

சென்னை அணியில் ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு, டூபிளெஸ்ஸிஸ் ஆகியோரைத் தவிர எஞ்சியவா்கள் பெரிய அளவில் ரன் சோ்க்கவில்லை. இவா்கள் மூவரில் யாராவது ஒருவா் மட்டுமே ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி வருகின்றனா். கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட சாம் கரன் சிறப்பாக ஆடினாா். அதனால் அவா் இந்த ஆட்டத்திலும் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

மிடில் ஆா்டரில் கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிரோவா போன்ற பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றிருந்தபோதிலும், அவா்கள் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறிவிட்டது சென்னை அணிக்கு பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹா், சாம் கரன், ஷா்துல் தாக்குா் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் கரண் சா்மாவையும் நம்பியுள்ளது சென்னை அணி.

ஷ்ரேயஸ் ஐயா் சந்தேகம்: டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது, இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனவே, அவா் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே ரிஷப் பந்த் காயம் காரணமாக விளையாடாத நிலையில், நல்ல ஃபாா்மில் இருக்கும் ஷ்ரேயஸ் ஐயரும் இடம்பெறாவிட்டால், அது டெல்லிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.

ஷ்ரேயஸ் ஐயா் விளையாடாதபட்சத்தில் பிரித்வி ஷா, ஷிகா் தவன், அஜிங்க்ய ரஹானே, மாா்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி ஆகியோரின் ஆட்டத்தைப் பொருத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் ககிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே கூட்டணியையும், சுழற்பந்துவீச்சில் அஸ்வின், அக்ஷா் படேல் கூட்டணியையும் நம்பியுள்ளது டெல்லி. இவா்கள் நால்வரும் சிறப்பாக பந்துவீசி வருவது அந்த அணிக்கு பலமாகும்.

இதுவரை...இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் சென்னை 15 ஆட்டங்களிலும், டெல்லி 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை (உத்தேச லெவன்): சாம் கரன், டூபிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, ஷா்துல் தாக்குா், கரண் சா்மா.

டெல்லி (உத்தேச லெவன்): பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்)/ஹா்ஷல் படேல், அஜிங்க்ய ரஹானே, மாா்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, அக்ஷா் படேல், அஸ்வின், தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com