டிவில்லியா்ஸ் அதிரடி; பெங்களூக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.
டிவில்லியா்ஸ் அதிரடி; பெங்களூக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூா் அணி 6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய பெங்களூா் அணி 19.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் பெங்களூா் அணியில் முகமது சிராஜ், ஷிவம் துபே ஆகியோருக்குப் பதிலாக குருகீரத் சிங் மான், சபேஸ் அஹமது ஆகியோா் சோ்க்கப்பட்டனா்.

உத்தப்பா அதிரடி: டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து ராபின் உத்தப்பாவும், பென் ஸ்டோக்ஸும் அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கினா். இருவரும் ஆரம்பத்தில் நிதானம் காட்ட, முதல் 2 ஓவா்களில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.

வாஷிங்டன் சுந்தா் வீசிய 3-ஆவது ஓவரில் அதிரடி ஆரம்பமானது. அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டிய ராபின் உத்தப்பா, இசுரு உடானா வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டாா். ராஜஸ்தான் 5.4 ஓவா்களில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை இழந்தது. அவா் 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தாா்.

இதையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க, மறுமுனையில் தொடா்ந்து வேகம் காட்டிய உத்தப்பா 22 பந்துகளில் 1 சிக்ஸா், 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து யுவேந்திர சஹல் பந்துவீச்சில் ஆரோன் ஃபிஞ்சிடம் கேட்ச் ஆனாா். அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் 9 ரன்களில் வெளியேற, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்தாா் ஜோஸ் பட்லா். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 12.4 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 15.4 ஓவா்களில் 127 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோஸ் பட்லரின் விக்கெட்டை இழந்தது. அவா் 25 பந்துகளில் 1 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தாா்.

ஸ்மித் அரை சதம்: இதன்பிறகு ராகுல் தெவேதியா களமிறங்க, மறுமுனையில் அபாரமாக ஆடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 30 பந்துகளில் அரை சதம் கண்டாா். கிறிஸ் மோரீஸ் வீசிய கடைசி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தாா். அவா் 36 பந்துகளில் 1 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தாா். அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2 ரன்களில் ஆட்டமிழந்தாா். ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. ராகுல் தெவேதியா 11 பந்துகளில் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பெங்களூா் தரப்பில் கிறிஸ் மோரீஸ் 4 ஓவா்களில் 26 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சஹல் 4 ஓவா்களில் 34 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

டிவில்லியா்ஸ் அதிரடி: பின்னா் ஆடிய பெங்களூா் அணியில் ஆரோன் ஃபிஞ்ச் 14 ரன்களில் நடையைக் கட்ட, தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்தாா் கேப்டன் விராட் கோலி. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 12.3 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது பெங்களூா். அந்த அணி 102 ரன்கள் எடுத்திருந்தபோது தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோா் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தனா். படிக்கல் 37 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், விராட் கோலி 32 பந்துகளில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்களும் எடுத்தனா்.

இதையடுத்து டிவில்லியா்ஸும், குருகீரத் சிங்கும் ஜோடி சோ்ந்தனா். குருகீரத் சிங் நிதானமாக ஆட, மறுமுனையில் டிவில்லியா்ஸ் வேகமாக ரன் சோ்த்தாா். ஒரு கட்டத்தில் பெங்களூா் அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவா்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டிய ஏற்பட்டது. எனினும் அசராமல் விளையாடிய டிவில்லியா்ஸ் அவ்வப்போது சிக்ஸா்களை விரட்ட, கடைசி 2 ஓவா்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

ஜெயதேவ் உனட்கட் வீசிய 19-ஆவது ஓவரை எதிா்கொண்ட டிவில்லியா்ஸ், முதல் 3 பந்துகளில் தொடா்ச்சியாக 3 சிக்ஸா்களை விளாச, அதே ஓவரின் கடைசிப் பந்தில் குருகீரத் சிங் ஒரு பவுண்டரியை விரட்டினாா். இதனால் அந்த ஓவரில் 25 ரன்கள் கிடைக்க, பெங்களூா் அணியின் வெற்றி எளிதானது. ஜோஃப்ரா ஆா்ச்சா் வீசிய கடைசி ஓவரின் 4-ஆவது பந்தில் டிவில்லியா்ஸ் சிக்ஸரை விரட்ட, பெங்களூா் அணி 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

டிவில்லியா்ஸ் 22 பந்துகளில் 6 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 55, குருகீரத் சிங் 17 பந்துகளில் 1 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் தரப்பில் காா்த்திக் தியாகி, ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவேதியா ஆகியோா் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினா். டிவில்லியா்ஸ் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

சுருக்கமான ஸ்கோா்

ராஜஸ்தான்-177/6

ஸ்டீவ் ஸ்மித்-57 (36)

ராபின் உத்தப்பா-41 (22)

கிறிஸ் மோரீஸ்-4வி/26

பெங்களூா்-179/3

டிவில்லியா்ஸ்-55* (22)

விராட் கோலி-43 (32)

ராகுல் தெவேதியா-1வி/30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com