தவனின் சதம் வீண்: டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ வீழ்த்தியது.  பஞ்சாபுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். 
தவனின் சதம் வீண்: டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ûஸ வீழ்த்தியது.  பஞ்சாபுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும்.
துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.  சதம் விளாசிய டெல்லி வீரர் தவன் ஆட்டநாயகன் ஆனார். 
இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் ரிஷப் பண்ட், ஷிம்ரோன் ஹெட்மயர், டேனியல் சாம்ஸ் ஆகியோர் பிளேயிங் லெவனில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். பஞ்சாபில் கிறிஸ் ஜோர்டானுக்குப் பதிலாக ஜிம்மி நீஷம் இணைந்திருந்தார். 
டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா - ஷிகர் தவன் களம் கண்டனர். கடந்த 2 ஆட்டங்களைப் போல இதிலும் சோபிக்காத பிருத்வி ஷா, 1 பவுண்டரியுடன் 7 ரன்களே சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் களம் கண்டார். 
மறுமுனையில் ஷிகர் தவன் பஞ்சாபின் பந்துவீச்சை வாணவேடிக்கைகளாக பறக்கவிடத் தொடங்கினார். இந்நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் 1 சிக்ஸருடன் 14 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். முருகன் அஸ்வின் வீசிய 9-ஆவது ஓவரில் அவரடித்த பந்து விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் கைகளில் தஞ்சமானது. 
அவரை அடுத்து ரிஷப் பண்ட் ஆட வந்தார். தகுந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காவிட்டாலும் தனது ஆட்டத்தை நேர்த்தியாக தொடர்ந்த தவன் அரைசதம் கடந்தார். மறுபுறம் பண்ட் 1 பவுண்டரி மட்டும் விளாசி 14 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 
அவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். முகமது ஷமி வீசிய 18-ஆவது ஓவரில் அவர் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்தார். மறுமுனையில் தவன் சதம் கடந்தார். 
ஸ்டாய்னிஸை அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் 1 சிக்ஸர் உள்பட 10 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். தவன் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி 2, கிளென் மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர். 
பின்னர் 165 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பஞ்சாப் அணியில், வழக்கமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க வீரர்கள் சொதப்பினர். மாறாக, மிடில் ஆர்டர் பலம் காட்டியது. முதல் விக்கெட்டாக 3-ஆவது ஓவரில் கேப்டன் லோகேஷ் ராகுல் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 
அடுத்து வந்த கிறிஸ் கெயில் சற்று அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்கள் அடித்த அவர், முருகன் அஸ்வின் வீசிய 6-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் அடித்து நொறுக்கினார். மறுமுனையில் 5 ரன்களுடன் மயங்க் அகர்வால் ரன் அவுட்டாக, கிளென் மேக்ஸ்வெல் ஆட வந்தார். 
இந்த ஆட்டத்தில் அவர் சற்று நிலைத்து ஆடினார். அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்திய நிகோலஸ்-மேக்ஸ்வெல் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் சேர்த்த நிகோலஸ், 13-ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடா களம் காண, மறுமுனையில் 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெல்லும் 16-ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சை விளாச முயல, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகளில் அது கேட்சானது. பின்னர் தீபக் ஹூடாவுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்திய ஜிம்மி நீஷம், கடைசியாக ஒரு சிக்ஸர் விளாசி வெற்றி இலக்கை கடந்தார். அவர் 10 ரன்களுடனும், தீபக் 1 பவுண்டரி உள்பட 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் ரபாடா 2, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

தவன் சாதனை 
இந்த ஆட்டத்தின் டெல்லி வீரர் ஷிகர் தவன் விளாசிய சதம், நடப்பு சீசனில் அவரது 2-ஆவது சதமாகும். இரு சதங்களையும் அவர் தனது அடுத்தடுத்த ஆட்டங்களில் விளாசியுள்ளார். முன்னதாக கடந்த கடந்த சனிக்கிழமை சென்னைக்கு எதிரான ஆட்டத்தின்போதும் 58 பந்துகளில் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 101 ரன்கள் விளாசியிருந்தார் தவன். இந்த இரு ஆட்டங்களிலும் அவர் ஆட்டமிழக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 
ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரரும் இத்தகைய சாதனையை இதுவரை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோர்
டெல்லி  - 164/5 
ஷிகர் தவன்    106* (61) 
ஷ்ரேயஸ் ஐயர்    14 (12) 
ரிஷப் பண்ட்    14 (20) 

பந்து வீச்சு
முகமது ஷமி    2/28 
ஜிம்மி நீஷம்    1/17 
கிளென் மேக்ஸ்வெல்     1/31

பஞ்சாப்  - 167/5
நிகோலஸ் பூரன்    53 (28) 
கிளென் மேக்ஸ்வெல்     32 (24) 
கிறிஸ் கெயில்     29 (13)

பந்துவீச்சு 
ககிசோ ரபாடா     2/27 
அக்ஸர் படேல்    1/27 
ரவிச்சந்திரன் அஸ்வின்    1/27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com