டி20 தரவரிசை: முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள ஆஸ்திரேலியா & இங்கிலாந்து அணிகள்!

டி20 தரவரிசையில் முதல் இடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொண்டுள்ளது இங்கிலாந்து அணி.
டி20 தரவரிசை: முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள ஆஸ்திரேலியா & இங்கிலாந்து அணிகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வெற்றியால் டி20 தரவரிசையில் முதல் இடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொண்டுள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனிலும் ஒருநாள் தொடர் மான்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன. செப்டம்பர் 4, 6, 8 தேதிகளில் டி20 தொடரும் செப்டம்பர் 11, 13, 16 தேதிகளில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. 

நேற்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஃபிஞ்ச் 40 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு டி20 தொடரையும் வென்றது. விக்கெட் கீப்பரும் தொடக்க வீரருமான பட்லர், 54 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இரு டி20 ஆட்டங்களில் வென்றதன் மூலம் டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக 273 புள்ளிகளைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இதனால் இரு அணிகளும் தற்போது முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இந்நிலையில் 3-வது டி20 ஆட்டம் நாளை செளதாம்ப்டனில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி தரவரிசையில் முதல் இடத்தைக் கைப்பற்றும் என ஐசிசி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com