ஆர்சிபி அணியின் கேப்டன் ஆன பிறகு அதிக ரன்களைக் குவித்து வரும் விராட் கோலி

2008 முதல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் கோலி...
ஆர்சிபி அணியின் கேப்டன் ஆன பிறகு அதிக ரன்களைக் குவித்து வரும் விராட் கோலி

2013-ல் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அபாரமாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி. அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி.

2008 முதல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் கோலி. 2013-ல் அந்த அணியின் கேப்டன் ஆனார். கேப்டன் ஆன பிறகு கோலியின் பேட்டிங் திறமை அதிகரித்துள்ளது. அணிக்காக அதிக ரன்கள் எடுத்துள்ளார். அதன் புள்ளிவிவரம்:

கேப்டனாக கோலி எடுத்த ரன்கள்

109 இன்னிங்ஸ், 4010 ரன்கள், சராசரி - 44.06, ஸ்டிரைக் ரேட் - 136.48, சதங்கள் - 5, அரை சதங்கள் - 29

கேப்டன் ஆகும் முன்பு, வீரராக கோலி எடுத்த ரன்கள்

60 இன்னிங்ஸ், 1402 ரன்கள், சராசரி - 29.96, ஸ்டிரைக் ரேட் - 119.42, சதங்கள் - 0, அரை சதங்கள் - 7

2016-ல் இருந்தது போல இந்தமுறை மிகச்சிறப்பான அணி உள்ளதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சமீபத்தில் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த வருட ஆர்சிபி அணியில் டி20 ஆட்டத்துக்குத் தேவையான அனுபவம் உள்ளது. அணியில் உள்ள இளைஞர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் அளிக்கவுள்ள வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளார்கள். இது அருமையான காலக்கட்டம். 2016-ம் ஆண்டு எங்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. அதற்குப் பிறகு அனைத்து விதமாகவும் சிறப்பாக உள்ள அணி இதுதான். திறமையுள்ள இந்த அணி, களத்தில் தங்களுடைய பங்களிப்பை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். பழைய அனுபவங்களை மறந்துவிட்டோம். அதை எப்போதும் சுமந்து கொண்டிருக்கக் கூடாது. எங்களுடைய அணியைப் பார்த்து பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. கோப்பையை வெல்ல இந்தமுறை மிகவும் ஆர்வமாக உள்ளோம். டி வில்லியர்ஸும் புத்துணர்ச்சியுடன் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com