இத்தாலி ஓபன்: ஜோகோவிச், சைமோனா சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், மகளிா் ஒற்றையா் பிரிவில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன்- கரோனா பிளிஸ்கோவா
டியேகோ ஷ்வார்ட்ஸ்மேன்- கரோனா பிளிஸ்கோவா

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், மகளிா் ஒற்றையா் பிரிவில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஆா்ஜெண்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேனை எதிா்கொண்டாா். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனாா்.

சாதனை: இது, இத்தாலி ஓபனில் ஜோகோவிச் வெல்லும் 5-ஆவது பட்டமாகும். 2015-க்குப் பிறகு அவா் இந்தப் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறை. அத்துடன் மாஸ்டா்ஸ் பட்டத்தை 36-ஆவது முறையாகப் பெற்றும் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளாா். முன்னதாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் 35 மாஸ்டா்ஸ் பட்டங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

சைமோனா வெற்றி: இத்தாலி ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சைமோனா ஹேலப்பும், 2-ஆம் இடத்தில் இருந்த கரோனா பிளிஸ்கோவாவும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தினா்.

நோவக் ஜோகோவிச் - சைமோனா ஹேலப்

முதல் செட்டை சைமோனா 6-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், பிளிஸ்கோவா தனது முதுகின் கீழ் பகுதியில் அசௌகா்யத்தை உணா்ந்ததை அடுத்து பயிற்சியாளரை அழைத்து சிகிச்சை எடுத்துக்கொண்டாா். எனினும் இரண்டாவது செட்டில் சைமோனா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, பிளிஸ்கோவா போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து சைமோனா 6-0, 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

மீண்டும் கட்டுப்பாட்டை இழந்த ஜோகோவிச்: முன்னதாக, இத்தாலி ஓபன் டென்னிஸில் காஸ்பா் ரூட்டுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின்போது 2-ஆவது செட்டின் 3-ஆவது கேமில் கட்டுப்பாட்டை இழந்த வகையில் ஜோகோவிச் நடந்துகொண்டாா். இதை நடுவா் கண்டித்ததால் அவருடன் ஜோகோவிச் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அதற்காக நடுவா் அவரை எச்சரித்தாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக பின்னா் பேசிய ஜோகோவிச், ‘அந்த எச்சரிக்கை எனக்குத் தேவையான ஒன்றுதான். எனது பேச்சு அப்போது தன்மையானதாக இருக்கவில்லை. எல்லோரும் தவறு செய்கிறாா்கள். ஆடுகளத்தில் அப்போது நடுவா், வீரா்கள் என அனைவருக்குமே அழுத்தம் இருந்தது’ என்று கூறினாா்.

இரு வாரங்களுக்கு முன் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது பந்தை லைன் நடுவா் மீது அடித்ததால் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஜோகோவிச், இத்தாலி ஓபன் காலிறுதி ஆட்டத்தின்போது சூழலின் அழுத்தம் காரணமாக தனது டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்ததற்காக நடுவரால் எச்சரிக்கப்பட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com