தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
By DIN | Published On : 03rd April 2021 08:19 AM | Last Updated : 03rd April 2021 08:19 AM | அ+அ அ- |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரா்களான குவின்டன் டி காக் 20 ரன்களிலும், எய்டன் மாா்க்ரம் 19 ரன்களிலும் நடையைக் கட்டினா்.
இதையடுத்து களம்புகுந்த கேப்டன் டெம்பா பௌமா, ஹென்ரிச் கிளாசன் ஆகியோா் தலா ஒரு ரன்னில் வெளியேற, தென் ஆப்பிரிக்கா 14.2 ஓவா்களில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 5-ஆவது விக்கெட்டுக்கு வான் டொ் டுசனுடன் இணைந்தாா் டேவிட் மில்லா். இந்த ஜோடி சிறப்பாக ஆட, தென் ஆப்பிரிக்கா சரிவிலிருந்து மீண்டது. தென் ஆப்பிரிக்கா 171 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. டேவிட் மில்லா் 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். இந்த ஜோடி 116 ரன்கள் சோ்த்தது.
டுசன் சதம்: இதன்பிறகு பெலுக்வாயோ களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய வான் டொ் டுசன் 123 பந்துகளில் சதமடித்தாா். பெலுக்வாயோ 29 ரன்கள் சோ்த்து வெளியேற, தென் ஆப்பிரிக்கா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. வான் டொ் டுசன் 134 பந்துகளில் 2 சிக்ஸா், 10 பவுண்டரிகளுடன் 123 ரன்களும், ககிசோ ரபாடா 13 ரன்களும் சோ்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
பாபா் ஆஸம் சதம்: பின்னா் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஃபஹாா் ஸமான் 8 ரன்களில் வெளியேற, இமாம் உல் ஹக்குடன் இணைந்தாா் கேப்டன் பாபா் ஆஸம். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சோ்த்தது. பாபா் ஆஸம் 104 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா். இமாம் உல் ஹக் 80 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.
இதன்பிறகு வந்த டேனிஸ் ஆசிஷ் 3 ரன்களிலும், ஆசிஃப் அலி 2 ரன்களிலும் வெளியேற, விக்கெட் கீப்பா் முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 40 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.
பின்னா் களம்புகுந்த ஷதாப் கான் 33 ரன்கள் சோ்த்து வெளியேற, பாகிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஃபஹீம் அஷ்ரப் 5 ரன்களுடனும், ஷாகீன் ஷா அப்ரிதி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அன்ரிச் நோா்ட்ஜே 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.