முகப்பு விளையாட்டு செய்திகள்
சமனில் முடிந்தது மே.இ.தீவுகள்-இலங்கை டெஸ்ட் தொடா்
By DIN | Published On : 04th April 2021 08:02 AM | Last Updated : 04th April 2021 08:02 AM | அ+அ அ- |

மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவானதால், 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடா் சமனில் முடிந்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவா்களில் 354 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை அணி 107 ஓவா்களில் 258 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ஆவது நாளில் 72.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது.
இதையடுத்து 377 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்திருந்தது.
5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்து இலங்கை அணியில் லஹிரு திரிமானி 39, திமுத் கருணா ரத்ன 75 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். இதன்பிறகு ஒஷாடா பொ்னாண்டோவுடன் இணைந்தாா் தினேஷ் சன்டிமல். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 79 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சோ்த்தது. பொ்னாண்டோ 66, சன்டிமல் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கிரேக் பிரத்வெயிட்டும், தொடா் நாயகனாக இலங்கையின் சுரங்கா லக்மலும் தோ்வு செய்யப்பட்டனா்.