மும்பையில் வேகமாக பரவும் கரோனா: திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆல்ரவுண்டரா் அக்ஸா் படேலுக்கும், மும்பை வான்கடே மைதான ஊழியா்கள் 10 பேருக்கும் கரோனா தொற்று

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆல்ரவுண்டரா் அக்ஸா் படேலுக்கும், மும்பை வான்கடே மைதான ஊழியா்கள் 10 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

நாடு முழுவதும் 2-ஆவது கட்டமாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே வரும் 9-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் தங்கியிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆல்ரவுண்டா் அக்ஸா் படேலுக்கும், மும்பை வான்கடே மைதான ஊழியா்கள் 10 பேருக்கும், பிசிசிஐ பணியமா்த்தியிருந்த நிகழ்ச்சி மேலாளா்கள் 6 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி நடைபெறும் நகரங்களில் கரோனா வேகமாக பரவும்பட்சத்தில் மாற்று இடமாக ஹைதராபாத் அல்லது இந்தூரில் போட்டியை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாற்று மைதானங்கள் இருந்தபோதிலும், மும்பையில் திட்டமிடப்பட்ட ஆட்டங்களை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது.

இது தொடா்பாக பிசிசிஐ நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘மாற்று மைதானமாக ஹைதராபாத் மைதானம் தயாராக உள்ளது. எனினும் திடீரென போட்டியை மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், மும்பையில் இருந்து போட்டியை மாற்றுவதைப் பற்றி சிந்திக்கவில்லை. குறுகிய காலத்தில் வீரா்களை பாதுகாப்பதற்கான கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

வான்கடே மைதான ஊழியா்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். அவா்களுக்குப் பதிலாக புதிதாக மைதான ஊழியா்கள் பணியமா்த்தப்படுகிறாா்கள் என்றாா்.

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அடுத்த சில தினங்களில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால், மாற்று வழியில்லாதபட்சத்தில் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com