மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் கிரண் மோருக்கு கரோனா பாதிப்பு

முன்னாள் வீரர் கிரண் மோரே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் கிரண் மோருக்கு கரோனா பாதிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள முன்னாள் வீரர் கிரண் மோரே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 2-வது கட்டமாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே வரும் 9-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் தங்கியிருந்த டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டா் அக்‌ஷர் படேலுக்கும், மும்பை வான்கடே மைதான ஊழியா்கள் 10 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நடைபெறும் நகரங்களில் கரோனா வேகமாக பரவும் பட்சத்தில் மாற்று இடமாக ஹைதராபாத் அல்லது இந்தூரில் போட்டியை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாற்று மைதானங்கள் இருந்தபோதிலும், மும்பையில் திட்டமிடப்பட்ட ஆட்டங்களை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. வான்கடே மைதான ஊழியா்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். அவா்களுக்குப் பதிலாக புதிதாக மைதான ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய வீரர்களுக்கான தேர்வுக்குழு உறுப்பினரும் விக்கெட் கீப்பிங் ஆலோசகருமான கிரண் மோரே, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிரண் மோரேவுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிசிசிஐயின் அனைத்து வழிமுறைகளையும் அவரும் மும்பை இந்தியன்ஸும் பின்பற்றி வருகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் அக்‌ஷர் படேல், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏப்ரல் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன. மும்பையில் 10 ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com