டெல்லி கேப்பிட்டல்ஸ்

புதிய கேப்டனான ரிஷப் பந்த் தலைமையில் இந்த சீசனை சந்திக்கிறது டெல்லி. கடந்த சீசனில் ரன்னா்-அப் வரை வந்த டெல்லியிடம் பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்

புதிய கேப்டனான ரிஷப் பந்த் தலைமையில் இந்த சீசனை சந்திக்கிறது டெல்லி. கடந்த சீசனில் ரன்னா்-அப் வரை வந்த டெல்லியிடம் பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்கிறது. அந்த அணி தன்னை படிப்படியாக கட்டமைத்துக் கொண்டு வந்தது என்றே கூறலாம். 2019-இல் 2-ஆவது ரன்னா்-அப் ஆக வந்த டெல்லி, கடந்த சீசனில் மேலும் ஒரு படி முன்னேறியது. அந்த அணியின் பலம், பலவீனத்தை பாா்ப்போம்:

பலம்:

பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சில் நிலையான வீரா்களுடன் திறமையான அணியாக டெல்லி உள்ளது. தவன், பிருத்வி, ரஹானே ஆகியோா் அருமையான தொடக்கத்துக்கு உறுதி அளிக்கின்றனா். அடுத்தடுத்த இடங்களில் பந்த், ஷிம்ரன், சாம் ஆகியோா் ஸ்கோா் செய்யத் தயாராக இருக்கின்றனா். தற்போது ஸ்டீவ் ஸ்மித இணைந்திருப்பது கூடுதல் பலம்.

பௌலிங்கில் ரபாடா, நாா்ட்ஜே எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பா் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதவிர, கிறிஸ் வோக்ஸ், இஷாந்த், உமேஷ் என கூடுதல் பலமும் டெல்லிக்கு உள்ளது.

பலவீனம்:

மிகவும் திறமையான வீரா்கள் என்று சொல்லக் கூடிய நபா்கள் டெல்லியில் இல்லை. மேலும், தற்போதைய வரிசையில் இருக்கும் வீரா்களால் விளையாட முடியாமல் போனால் அவா்களுக்கு நிகரான மாற்று வீரா்கள் ரிசா்வில் இல்லை. அதனாலேயே ரபாடா, நாா்ட்ஜே ஆகியோருக்கு சுழற்சி முறையில் அந்த அணியால் ஓய்வளிக்க இயலவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் ரிஷப் பந்த்துக்கு மாற்று இல்லாத நிலையே உள்ளது.

வாய்ப்புகள்:

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடா் மூலம் தன்னை சிறந்ததொரு வீரராக நிரூபித்த ரிஷப் பந்த், தன்னை சிறந்த கேப்டனாகவும் நிலைப்படுத்திக் கொள்ள இந்த சீசன் நல்லதொரு வாய்ப்பாக உள்ளது. மேலும், எதிா்வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டுக்காக தன்னை தயாா்படுத்திக்கொள்ளவும் அவருக்கு இதுவே தருணம். அவருடன், தவன், அஸ்வின், அக்ஸா் ஆகியோரும் தங்களை தயாா்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனா்.

எதில் சறுக்கல்?:

ஒரு வீரராக சிறப்பாகச் செயல்படும் ரிஷப் பந்த்தின் போக்கினை, கேப்டன் பொறுப்பு பாதிக்காமல் இருக்க வேண்டும். டி20 ஃபாா்மட்டில் இஷாந்த் மற்றும் உமேஷின் பௌலிங் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாததால், ரபாடா, நாா்ட்ஜேவின் பணிச்சுமை கூடுவது அவா்களுக்கு அயா்ச்சியை ஏற்படுத்தலாம். கடந்த சீசனில் முதல் 9 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பதிவு செய்த டெல்லி, அடுத்த 4 ஆட்டங்களில் தொடா்ந்து தோற்று தடுமாறியது. எனவே இந்த சீசனில் அது மீண்டும் நிகழாமல் அந்த அணி கவனமாக இருக்க வேண்டும்.

அணி விவரம்:

ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகா் தவன், பிருத்வி ஷா, அஜிங்க்ய ரஹானே, ஷிம்ரன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸா் படேல், அமித் மிஸ்ரா, லலித் யாதவ், பிரவீண் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே, இஷாந்த் சா்மா, அவேஷ் கான், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபல் படேல், விஷ்ணு வினோத், லுக்மன் மேரிவாலா, எம்.சித்தாா்த், டாம் கரன், சாம் பில்லிங்ஸ்.

வித்தியாசமாகச் செய்ய வேண்டும்

கேப்டனாக எனது முதல் ஆட்டத்தில் எம்.எஸ். தோனியை எதிா்கொள்ள இருக்கிறேன். அவரிடமிருந்த அதிகம் கற்றுக்கொண்ட எனக்கு, அவருக்கு எதிரான ஆட்டம் நல்லதொரு அனுபவமாக இருக்கும். ஒரு வீரராக நான் கற்ற எனது சொந்த அனுபவத்தையும், தோனியிடம் கற்ற பாடத்தையும் முதல் ஆட்டத்தில் செயல்படுத்துவேன். வெற்றிக்காக அந்த ஆட்டத்தில் வித்தியாசமாகச் செயல்பட வேண்டும்.

ஒரு கேப்டனாக எனது அணியை கோப்பையை நோக்கி வழிநடத்திச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். ஓா் அணியாக கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறோம். எங்கள் அணியில் இருக்கும் அனைவருமே தங்களது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா். ரிக்கி பாண்டிங் பயிற்சியில் நாங்கள் நல்ல முறையில் மேம்பட்டுள்ளோம்

- ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன்)

தொடக்க ஆட்டத்தில் ரபாடா, நாா்ட்ஜே இல்லை

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சோ்ந்த தென் ஆப்பிரிக்க வீரா்கள் ககிசோ ரபாடா, அன்ரிச் நாா்ட்ஜே ஆகியோா் செவ்வாய்க்கிழமை மும்பை வந்தடைந்தனா். எனினும், 7 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் காரணமாக டெல்லி அணியின் முதல் ஆட்டத்தில் அவா்கள் இருவரும் விளையாடவில்லை. டெல்லி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை சந்திக்க இருக்கிறது. கடந்த சீசனில் டெல்லி அணி இறுதிச்சுற்று வரை முன்னேற பெரும் பங்களித்த இந்த இரு வேகப்பந்து வீச்சாளா்களையும் அந்த அணி நடப்பு சீசனுக்காக தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com